கனடாவில் குடியுரிமை கோரி விண்ணப்பித்து காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள்: கொரோனா பரவலால் ஏற்பட்டுள்ள பிரச்சினை
கொரோனா பரவல் காரணமாக, தங்கள் கனேடிய குடியுரிமை விண்ணப்பம் பரிசீலிக்கப்படுவதற்காக காத்திருக்கும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை எக்கசக்கமாக உயர்ந்துள்ளது.
அவர்களில் ஒருவர் மீனாக்ஷி... 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் மீனாக்ஷியின் குடியுரிமை தேர்வுக்கான திகதி அறிவிக்கப்பட்டது. இன்னும் கொஞ்ச காலத்தில் தனது கனேடிய குடியுரிமைக் கனவு நிஜமாகிவிடும் என்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்த மீனாக்ஷிக்கு இடிபோல் வந்தது அந்த செய்தி.
ஆம், மார்ச் மாதம் 11ஆம் திகதி, மீனாக்ஷியின் தேர்வுக்கு ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், உலகமே மாறிப்போனது. ஆம், அப்போதுதான் கொரோனா ஒரு கொள்ளைநோய் என உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. குடியுரிமைத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன...
பல மாதங்கள் கடந்த நிலையில், தேர்வுகள் ஒன்லைன் தேர்வுகளாக மாற்றப்படுவதாக நவம்பர் மாத இறுதியில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்குள் தேர்வுக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை பல ஆயிரங்களாக உயர்ந்துவிட்டது.
2020 மார்ச்சில் தேர்வுக்காக காத்திருந்தவர்களின் எண்ணிக்கை 87,000 ஆக இருந்தது மாறி, இந்த ஆண்டு துவக்கத்தில் அது 102,000 ஆக உயர்ந்துவிட்டது. மீனாக்ஷியைப் பொருத்தவரை, அது குடியுரிமை தேர்வுக்கான காத்திருப்பு மட்டுமல்ல, 10 ஆண்டுகளுக்கு முன் கனடாவுக்கு வந்து ஒன்ராறியோவில் வாழ்ந்து வரும் மீனாக்ஷிக்கு வேலை தேடுவதிலும் பிரச்சினைகள் உள்ளன.
இந்தியாவில் அவர் வாழும் பகுதியைப் பொருத்தவரை அவருக்கு மீனாக்ஷி என்ற ஒரு பெயர்தான்... மேலை நாட்டவர்களைப் போல இரண்டு அல்லது மூன்று பெயர்கள் இல்லை. ஆக, அவர் வேலை தேடவேண்டுமானால் ஒரு surnameஐ பெற்றுக்கொள்ளவேண்டும்.
அதை சட்டப்படி செய்யவோ குடியுரிமை தேர்வில் வெற்றி பெற்றாகவேண்டும். கைரேகை பதிவுகள் முதலான நடைமுறைகளுக்காக ஏராளம் செலவழித்தாயிற்று... காத்திருந்து ஒரு வழியாகிவிட்ட மீனாக்ஷி, நான்காவது முறையாக கைரேகை பதிவுகளுக்கு அழைத்தார்களென்றால், அவ்வளவுதான், இதற்கு மேல் பொறுமையில்லை, எனது விண்ணப்பத்தை வாபஸ் பெறப்போகிறேன் என்கிறார்.
இதற்கிடையில், புலம்பெயர்தல் துறை அமைச்சர் Marco Mendicino, குடியுரிமைத் தேர்வுகளுக்காக காத்திருப்போர் நம்பிக்கையுடன் காத்திருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
விரைவில், டிஜிட்டல் முறை சோதனைகள் பல வர இருக்கின்றன என்று கூறியுள்ளார் அவர். அவரது அறிவிப்பு, நீண்ட காலம் காத்திருக்கும் மீனாக்ஷி போன்றவர்களுக்கு எப்படியாவது மகிழ்ச்சியைக் கொண்டு வந்தால் நல்லதுதான். என்ன மாற்றம் நடக்கும், எப்போது நடக்கும் என்பவற்றை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.