பிரேசிலிய கொரோனா தொற்றால் மொத்தமாக முடக்கப்பட்ட கனேடிய நகரம்: வெளிவரும் பகீர் தகவல்
கனேடிய நகரமான விஸ்லரில் உருமாற்றம் கண்ட பிரேசிலிய கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக நகரம் முழுவதும் முடக்கப்பட்டுள்ளது.
மேற்கு கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் அமைந்துள்ள விஸ்லர் பகுதியில் தற்போது மிக ஆபத்தான பிரேசில் கொரோனா தொற்று பரவி வருகிறது.
மார்ச் மாத இறுதியில் இருந்தே, சுற்றுலாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ரத்து செய்திருன்ந்தனர். விஸ்லர் நகரில் மட்டும், சுமார் 200 பேர்களுக்கு ஆபத்தான பிரேசில் தொற்று பரவியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் மட்டும் பிரேசில் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 877 என அடையாளம் காணப்பட்டுள்ளது.
விஸ்லர் பகுதியை பொருத்தமட்டில் பெரும்பாலும் இளைஞர்களையே பிரேசில் கொரோனா தொற்று தாக்கியுள்ளது. விஸ்லர் பகுதியில் பிரேசில் தொற்று பரவக் காரணம் என்ன என்பது தொடர்பில் நிபுணர்கள் கடும் குழப்பத்தில் உள்ளனர்.
முதலில் பிரேசில் தொற்றால் பாதிக்கப்பட்ட 84 பேர்களில் எவரும் விஸ்லர் பகுதியில் இருந்து வெளிநாடு சென்றவர்கள் அல்ல என்பதே, நிபுணர்களை குழப்ப காரணம். சிலர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்துக் கொண்டதன் பின்னர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
விஸ்லர் பகுதிக்கு உலகின் பல பகுதிகளில் இருந்து மக்கள் வந்து போவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள மக்கள் கருதுகின்றனர். மார்ச் மாதத்திலிருந்து, உருமாற்றம் கண்ட பிரேசிலிய வைரஸ் மாகாணத்தில் மேலும் பரவியதுடன், அண்டை மாகாணமான ஆல்பர்ட்டாவையும் பாதிப்புக்கு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது.
மட்டுமின்றி வான்கூவர் கானக்ஸ் என்ஹெச்எல் ஹொக்கி கிளப்பைச் சேர்ந்த 21 வீரர்களும் நோய்வாய்ப்பட்டனர்.
கொரோனா தொற்று பரிசோதனைகளுக்கு உட்படுவதில் பிரிட்டிஷ் கொலம்பியா மக்கள் மெத்தனமாக இருந்ததே, தற்போதுள்ள நிலைக்கு காரணம் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.