இரவில் உறக்கம் வராமல் தவிக்கிறீர்களா? இரண்டே நிமிடங்களில் உறக்கம் வர கனேடிய நிபுணர் கூறும் ஆலோசனை
கனேடிய பிட்னஸ் குருவான Justin Augustin என்பவர், டிக் டாக்கிலும், தொலைக்காட்சியிலும் பல்வேறு பிட்னஸ் ஆலோசனைகளைக் கொடுப்பவர்.
கனடாவின் மொன்றியலைச் சேர்ந்த Justin, சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்காக எளிய ஆலோசனை ஒன்றைத் தெரிவித்துள்ளார்.
எந்த நேரத்திலும், எந்த இடத்தில் இருந்தாலும், உடனடியாக தூக்கம் வருவதற்காக, இராணுவத்தினர் பயன்படுத்தப்படும் எளிய பயிற்சி இது என்று கூறும் Justin, அதை மட்டும் தொடர்ந்து செய்துவந்தால், இரவில் இரண்டே நிமிடங்களில் தூங்கிவிடலாம் என்கிறார்.
அது என்ன பயிற்சி என்று பார்க்கலாமா...
- மல்லாக்கப் படுத்துக்கொண்டு, ஆழ்ந்த மூச்சு விடுங்கள்
- உங்கள் உடலை படிப்படியாக ரிலாக்ஸ் செய்யுங்கள். அதாவது, முதலில் நெற்றி, அடுத்து கண்கள், அடுத்ததாக கன்னங்கள், பிறகு தாடை, அடுத்து கழுத்து, பிறகு தோள் என படிப்படியாக கால்கள் வரை ரிலாக்ஸ் செய்யுங்கள்.
- முழு உடலையும் இவ்விதம் படிப்படியாக, தனித்தனியாக ரிலாக்ஸ் செய்யும்போது, ஆழமாக மூச்சு விடுவதையும் சேர்த்தே செய்யுங்கள்.
- உங்கள் உடல் முழுவதும் ஒரு வெதுவெதுப்பான உணர்வு பரவுவதாக கற்பனை செய்துகொள்ளுங்கள்.
- மூச்சு விடுவதில் கவனம் செலுத்துங்கள்
- மனதில் எழும் அழுத்தத்தை ஏற்படுத்தும் எண்ணங்களை அகற்றி, இரண்டு காட்சிகளை கற்பனை செய்துகொள்ளுங்கள்: ஒன்று, நீங்கள் ஒரு அமைதியான ஏரியில், ஒரு படகில் படுத்திருக்கிறீர்கள், இன்னொன்று: ஒரு இருட்டான அறையில், ஒரு வெல்வெட் துணியாலான தொட்டிலில் படுத்திருப்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள்.
- மனதில் வேறு எண்ணங்கள் எழுந்தால், எதுவும் நினைக்காதே, எதுவும் நினைக்காதே என்று 10 நொடிகளுக்கு தொடர்ச்சியாக சொல்லுங்கள்...
இந்த பயிற்சியை, ஆறு வாரங்களுக்கு தொடர்ச்சியாக செய்துவந்தால், அதற்குப் பிறகு, எந்த சூழலிலும், படுத்த இரண்டு நிமிடங்களுக்குள் தூங்கி விடலாம் என்கிறார் Justin.
இன்னொரு விடயம் என்னவென்றால், மன நல மருத்துவர்கள் கூட, மனதை ரிலாக்ஸ் ஆக்குவதற்காக தங்களிடம் ஆலோசனை கேட்டு வருபவர்களுக்கு, இந்த பயிற்சியை அளிப்பதுண்டு என்பது குறிப்பிடத்தக்கது.