கனடாவும் இந்தியாவும் எங்களை கைவிட்டுவிட்டன... தாயின் இறுதிச்சடங்குக்காக இந்தியா சென்ற குடும்பத்தின் பரிதாப நிலை
தாயின் இறுதிச்சடங்குக்காக இந்தியா சென்ற கனேடிய குடியுரிமை கொண்ட குடும்பம் ஒன்று, இந்தியாவில் அதிகரித்துவரும் கொரோனா பிரச்சினையால் கனடா திரும்ப முடியாமல் பரிதவித்துவருகிறது. மார்ச் மாதம் Anurag Sharmaவின் தாயின் இறுதிச்சடங்குக்காக இந்தியா சென்றது அவரது குடும்பம்.
இறுதிச்சடங்கை முடித்து மே மாதம் 2ஆம் திகதி கனடா திரும்ப டிக்கெட் முன்பதிவு செய்திருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக, இந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து கனடா செல்லும் விமானங்கள் தடை செய்யப்படுவதாக ஏப்ரல் 22ஆம் திகதி செய்தி வெளியானது.
மே 2ஆம் திகதி பயணம் ரத்தாக, அவசர அவசரமாக மே 5ஆம் திகதி அமெரிக்கா வழியாக கனடா செல்லும் விமானம் ஒன்றில் டிக்கெட் முன்பதிவு செய்தார்கள் Sharmaவின் குடும்பத்தினர்.
ஆனால், மே 4 அன்றே, தனது குடிமக்கள், நிரந்தர வாழிட உரிமம் கொண்டவர்கள் தவிர மற்றவர்கள் இந்தியாவிலிருந்து வர அனுமதியில்லை என்று அமெரிக்கா கூறிவிட்டது.
எப்படியாவது கனடா வந்து சேர்ந்துவிட எல்லா முயற்சிகளையும் எடுத்துவருவதாக தெரிவிக்கிறார் Sharma. Sharmaவின் மனைவி, கனடாவில், ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு ஊதியம் என்ற வகையிலான வேலையைத்தான் செய்து வருகிறார்.
அவர் தாமதிக்க தாமதிக்க, அவரது ஊதியம் அடிபடுவதோடு, அவர் மொத்தமாக வேலையிழக்கும் அபாயமும் உள்ளது. Sharmaவின் மகளும் இம்மாதம் புதிதாக ஒரு வேலையில் சேரவேண்டும், ஆனால் அதற்குள் கனடா செல்ல வாய்ப்புக் கிடைக்குமா என்று தெரியவில்லை. எல்லாவற்றிற்கும் மேல், 57 வயதாகும் Sharmaவுக்கு கால்கரியிலிருக்கும் தனது மருத்துவரை சந்திக்கவேண்டும்.
காரணம், தனக்கு புற்றுநோய் உள்ளதா இல்லையா என அவர் உறுதி செய்துகொள்ளவேண்டியுள்ளது! இந்தியாவில் கொரோனா நிலைமை முன்னேறுமா என்பது தெரியவில்லை என்கிறார் Sharma.
அமெரிக்காவைப் போல் கனடாவும் தனது குடிமக்களை நாட்டுக்கு அழைத்துக்கொள்ள ஏற்பாடு செய்யவேண்டும் என்கிறார் Sharma. இனி மே 22தான் கனடா செல்ல வாய்ப்பு கிடைக்கும் என Sharmaவின் குடும்பம் எதிர்பார்க்கும் நிலையில், இந்தியாவின் கொரோனா நிலைமை முன்னேறவில்லையானால், விமான பயணத் தடை நீட்டிக்கப்படவும் வாய்ப்புள்ளது. இப்போதைக்கு, இந்தியாவும் கனடாவும் எங்களைக் கைவிட்டுவிட்டன, அவ்வளவுதான் என்கிறார் Sharma.