பிறக்கப்போகும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை அறிவிப்பதற்காக நடத்தப்பட்ட பார்ட்டி... நேரிட்ட எதிர்பாராத அசம்பாவிதம்
கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்ணின் வயிற்றிலிருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை குடும்பத்தினருக்கு தெரியப்படுத்துவதற்காக, மேலை நாடுகள் பலவற்றில் ஒரு சம்பிரதாய நிகழ்ச்சி நடத்தப்படுவதுண்டு.
சிலர் ஒரு பலூனுக்குள் வண்ணப் பொடியை போட்டு ஊதி வைத்துவிட்டு, குடும்பத்தார் முன்னிலையில் அந்த பலூனை உடைப்பார்கள்.
அந்த பலூன் வெடித்து அதற்குள்ளிருந்த பொடி பரவும். அந்த பொடி இளஞ்சிவப்பு நிறத்திலிருந்தால் பிறக்கப்போகும் குழந்தை பெண் என்றும், நீல வண்ணப்பொடி வெளியானால் ஆண் குழந்தை என்றும் மக்கள் அறிந்துகொள்வார்கள்.
வேறு சிலர், இதையே பிரம்மாண்டமாக கொண்டாடுகிறார்கள். அவர்கள், ஒரு பெரிய கருவிக்குள் இதே வண்ணப்பொடியை வைத்து, அதை வெடிமருந்துகொண்டு வெடிக்கச் செய்கிறார்கள். ஆனால், இந்த முறை ஆபத்தானதாகும்.
சமீபத்தில், ஆல்பர்ட்டாவில் இதுபோல் குழந்தை ஆணா பெண்ணா என்பதை தெரிவிப்பதற்காக பார்ட்டி ஒன்று நடந்துள்ளது. அந்த பார்ட்டியில் கருவி ஒன்றிற்குள் வண்ணப்பொடிகள் போடப்பட்டு, வெடிப்பொருட்கள் மூலம் அது வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அந்த கருவி வெடித்துச் சிதறும்போது பயங்கர தீ வெளியாகியுள்ளது.
அந்த தீ, அருகிலுள்ள தாவரங்களில் பிடிக்க, ஒரு ஏக்கர் அளவிலான வனப்பகுதி தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது.
தீயணைப்புத்துறையினர் வந்துதான் அந்த தீயை அணைக்க முடிந்துள்ளது. எனவே, அந்த பார்ட்டியை நடத்தியவர்களுக்கு 500 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இதுபோல் குழந்தையின் பாலினம் அறியும் பார்ட்டிகளில் இத்தகைய வெடிபொருட்கள் பயன்பாட்டுக்கு சில குறிப்பிட்ட பகுதிகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், அப்படியே அவற்றை பயன்படுத்த விரும்பினால் வனத்துறை அலுவலரின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெறுவது அவசியம் என்றும் ஆல்பர்ட்டா வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.