கனடாவில் பரிசீலிக்கப்பட காத்திருக்கும் 1.8 மில்லியன் புலம்பெயர்தல் விண்ணப்பங்கள்: கனேடிய புலம்பெயர்தல் அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்
கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, 2021 அக்டோபர் 27 நிலவரப்படி, 1,792,000 புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட காத்திருப்பதாக தெரிவித்துள்ளது.
அவற்றில் 548,000 விண்ணப்பங்கள் நிரந்தர வாழிடம் கோரும் விண்ணப்பங்கள். (பொருளாதார, குடும்ப, அகதிகள் மற்றும் மனிதநேய வகை கோரிக்கைகள்)
776,000 தற்காலிக விண்ணப்பங்கள் (கல்வி கற்க அனுமதி, வேலை செய்ய அனுமதி, தற்காலிக வாழிட விசா மற்றும் visitor extension கோரிக்கைகள்)
468,000 கனேடிய குடியுரிமை விண்ணப்பங்கள்
ஆக மொத்தம் 1,792,000 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவதற்காக காத்திருக்கின்றன.
சர்வதேச பயணக் கட்டுப்பாடுகள், எல்லைக் கட்டுப்பாடுகள், வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு குறைவான பேருக்கே வாய்ப்பு மற்றும் கொரோனா காரணமாக ஆவணங்களைப் பெறுவதில் பிரச்சினைகள் ஆகிய காரணங்களாலேயே இவ்வளவு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டதாக கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பின் முயற்சியையும் மீறி, தங்கள் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவதற்காக சிலர் நீண்ட காலம் காத்திருக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டதாகவும், பரிசீலிக்கும் நேரத்தைக் குறைக்க தங்களாலான முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ள அவர், சூழ்நிலையை புரிந்துகொண்டு, இதுவரை பொறுமை காத்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும், அவர்களை கனடாவுக்கு வரவேற்கும் நாளுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.