அமெரிக்கா செல்ல முயன்ற கனேடியர் சந்தித்த மோசமான அனுபவம்
அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்லும் கனேடியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்ட நிலையிலும், கனேடியர்களை அமெரிக்க எல்லை அதிகாரிகள் மோசமாக நடத்தும் சம்பவங்கள் தொடர்கின்றன.
அமெரிக்கா செல்ல முயன்ற கனேடியர்
இந்நிலையில், அமெரிக்கா செல்ல முயன்ற கனேடியர் ஒருவர், அமெரிக்க எல்லையில் மோசமான அனுபவம் ஒன்றை சந்தித்துள்ளார்.
கெவின் லார்சன் (68) என்னும் கனேடியர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் திகதி, நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா செல்ல முயன்றுள்ளார்.

ட்ரம்ப் நிர்வாகம் கனேடியர்களை நடத்தும் விதம் குறித்து தான் நன்கு அறிந்திருப்பதாக தெரிவிக்கும் கெவின், தன்னை அமெரிக்க எல்லை அதிகாரிகள் திருப்பி அனுப்பிவிடக்கூடும் என்பதைக் கூட தான் அறிந்துவைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
என்றாலும், இப்படி ஒரு மோசமான அனுபவம் தனக்குக் கிடைக்கும் என தான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்கிறார் அவர்.
ஆம், எல்லையில் கெவினை நிறுத்தி கேள்விகள் கேட்ட அமெரிக்க எல்லை அதிகாரிகள், அவரிடம், தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவளிப்பதில்லை என கூறும் ஒரு ஆவணத்தில் கையெழுத்திடும்படி கூறியுள்ளனர்.
அதைத் தொடர்ந்து, கெவினிடம் அவரது DNAவை கொடுக்கவேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்கள் அமெரிக்க அதிகாரிகள்.
தான் ஒன்றும் குற்றவாளி அல்ல என்று கூறி DNAவை சேகரிக்க கெவின் அனுமதி மறுக்க, அவரை ஓராண்டு சிறையில் அடைக்கமுடியும் என மிரட்டியுள்ளார்கள் அவர்கள்.
ஆகவே, வேறு வழியில்லாமல் தனது DNAவை சேகரிக்க அவர்களுக்கு அனுமதியளித்துள்ளார் அவர்.
இந்த விடயத்தை அவர் ஊடகங்களுடன் பகிர்ந்துகொண்டுள்ள நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜேமி ராஸ்கின் (Jamie Raskin) மற்றும் டெபி டிங்கல் (Debbie Dingell) ஆகிய இருவரும் கெவின் நடத்தப்பட்ட விதத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

ஏற்கனவே கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு ட்ரம்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள் கெவினை நடத்திய விதம் குறித்து அவர்கள் அதிகாரிகளிடம் விளக்கம் கோரியுள்ளார்கள்.
அத்துடன், மிச்சிகனைச் சேர்ந்த டெபி டிங்கல், கனடா தங்கள் குடும்பம் என்றும், கனடாவுக்கும் மிச்சிகனுக்குமான உறவு விலையேறப்பெற்றது என்றும், நாங்கள் கனேடியர்களை நேசிக்கிறோம் என்றும் கூறியுள்ளதுடன், கெவின் விவகாரம் குறித்து தாங்கள் விளக்கம் கேட்டுள்ளதாகவும், பதில் கிடைக்கும் வரை விடமாட்டோம் என்றும் கூறியுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |