6 வயது கருப்பின சிறுமிக்கு கைவிலங்கிட்டு அரை மணி நேரம் தரையில் அழுத்திவைத்திருந்த பொலிசார்: மனித உரிமைகள் ஆணையம் அதிரடி தீர்ப்பு
கனடாவில், பொலிசார் ஆறு வயது கருப்பின சிறுமி ஒருத்திக்கு கைவிலங்கிட்டு, அவளை கீழே தள்ளி, சுமார் அரை மணி நேரம் அதே நிலையில் வைத்திருந்த வழக்கில் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது மனித உரிமைகள் ஆணையம் ஒன்று.
கனடாவின் Peel பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் கருப்பின சிறுமி ஒருத்தி மற்றொரு சிறுமியை அடித்ததுடன், பள்ளி முதல்வர் மீது புத்தகங்களை தூக்கி வீசியிருக்கிறாள்.
பொலிசார் பள்ளிக்கு வரவழைக்கப்பட, அந்த சிறுமி பொலிசாரிடமிருந்து தப்பியோட முயலும்போது, அவர்களை கடிக்கவும் நகத்தால் கீறவும் செய்திருக்கிறாள்.
உடனே அவளுக்கு கைவிலங்கிட்ட பொலிசார், அவளை கீழே தள்ளி, அவளை முகங்குப்புற சுமார் அரை மணி நேரம் அழுத்திவைத்திருக்கிறார்கள்.
அப்படி செய்யும்போது அவளுக்கு மூச்சுத்திணறும் அபாயம் இருந்ததாக பொலிசாரில் ஒருவரே தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினை ஒன்ராறியோ மனித உரிமைகள் ஆணையம் முன் கொண்டு வரப்பட்டது.வழக்கை விசாரித்த ஆணையம், சிறுமி கைது செய்யப்பட்ட விதத்தில், அவளது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆணைய உறுப்பினர்களில் ஒருவரான Brenda Bowlby, தனது தீர்ப்பில், அந்த சிறுமி வெறும் ஆறு வயதேயான ஒரு குழந்தை என்றும், அவளைக் கைது செய்த பொலிசார் ஆறு அடி உயரமும் சுமார் 200 பவுண்டுகள் எடையும் கொண்டவர்கள் என்றும், அவர்கள் சிறுமியை நடத்திய விதம் தவறான அணுமுறை என்றும், 28 நிமிடம் முகங்குப்புற அழுத்திவைக்கப்பட்டும், குழந்தைக்கு எந்த காயமும் ஏற்படாதது அதிர்ஷ்டமே என்றும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அந்த குழந்தை, தன் தந்தையின் கொலையையும் தாயின் புற்றுநோய் பிரச்சினையையும் கண்டிருக்கிறாள்.
இந்த நிலையில் பொலிசாரால் அவள் நடத்தப்பட்ட விதம், இந்த வயதிலேயே, கருப்பினத்தவருக்கு எதிரான இனவெறி தொடர்பான எண்ணங்களை அவள் மனதில் ஏற்படுத்தும் என்றும், ஒரு வெள்ளையின சிறுமியை விட தான் வித்தியாசமாக நடத்தப்படுவேன் என்ற எண்ணமும் அவளுக்கு உருவாகும் என்றும் தெரிவித்துள்ளார் அவர்.
பொலிசார் அந்த சிறுமி மீது இன ரீதியான பாகுபாடு காட்டப்பட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை மறுத்ததுடன், அவளையும் மற்றவர்களையும் பாதுகாப்பாக வைக்கத்தான் தாங்கள் அவளுக்கு கைவிலங்கிட்டதாகவும் கூறினர்.
ஆனால், அதை ஏற்க மறுத்த மனித உரிமைகள் ஆணையம், பிப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்குள், பொலிசார் அந்த சிறுமியின் தாய்க்கு 35,000 டொலர்கள் வழங்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
வழக்குச் செலவுக்காகவும், அந்த சிறுமியின் சுயமரியாதைக்கும், உணர்வுகளுக்கும், கௌரவத்திற்கும் களங்கம் ஏற்படுத்தியதற்காகவும் தீர்வாக இந்த தொகையை வழங்கவேண்டும் என மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.