கனடாவுக்கு 24 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை அனுப்ப முயன்ற முக்கிய புள்ளி: பொலிசார் தீவிர வேட்டை
கனடாவுக்கு 24 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை அனுப்ப முயன்ற முக்கிய புள்ளியை கண்டுபிடிப்பதற்காக பொலிசார் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளார்கள்.
அந்த நபர் யாழ்ப்பாணத்திலிருந்து செயல்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன், அந்த நபர் இந்த 24 பேரையும் கனடாவுக்கு அனுப்புவதற்காக, ரூபாய் 300,000 முதல் 500,000 வரை கட்டணம் வசூலித்துள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
கனடாவுக்கு செல்லும் முயற்சியில், லொறி ஒன்றில் கல்பிட்டி என்ற இடத்திற்கு சென்ற அந்த 24 இலங்கையர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்கள்.
கைது செய்யப்பட்டவர்களில், ஒரு பெண், 20 ஆண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் இருந்துள்ளார்கள்.
இதுபோல் சட்டவிரோதமாக கனடா அனுப்புவதாக கூறும் கும்பல்களின் மோசடியில் சிக்கவேண்டாம் என பொலிசார் மக்களை அறிவுறுத்தியுள்ளார்கள்.