கொரோனா தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் போராட்டம்... அதிரடி நடவடிக்கையில் இறங்கிய கனடா பொலிசார்
கனடாவில் ட்ரக் சாரதிகள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போடவேண்டும் என்ற அரசின் உத்தரவை எதிர்த்து ஆங்காங்கே சாரதிகள் போராட்டத்தில் இறங்கினர்.
மேலும், அமெரிக்காவையும் கனடாவையும் இணைக்கும் Ambassador Bridge என்ற பாலத்தில் ட்ரக்குகள் அணிவகுத்து நின்றதால், இரு நாடுகளுக்கும் இடையிலான போக்குவரத்து, குறிப்பாக சரக்குப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனால், 850 மில்லியன் டொலர்கள் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
உள்ளூர் மேயர்கள் முதல் கனடாவின் பிரதமர் வரையிலானவர்களின் எச்சரிக்கையையும் மீறி சாரதிகள் பாலத்தில் இருந்து அகலாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கிடையில், கனேடிய நீதிபதி ஒருவர் Ambassador Bridge பாலத்தில் போக்குவரத்தைத் தடுப்பதற்கு 10 நாட்களுக்குத் தடை விதித்து உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவை மீறியும் போராட்டக்காரர்கள் பாலத்திலிருந்து அகலாமல் போராட்டத்தைத் தொடரவே, பொலிசார் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கினார்கள்.
அதன்படி, நேற்று காலை பாலத்தை ’சுத்தம் செய்யும்’ நடவடிக்கைகளில் இறங்கினார்கள் கனேடிய பொலிசார். போராட்டக்காரர்களைக் கைது செய்ததுடன், அவர்களது வாகனங்களையும் பொலிசார் பறிமுதல் செய்யத்துவங்கினர்.
ஆகவே, வேறு வழியில்லாமல் போராட்டக்காரர்கள் அடிபணியவேண்டியதாயிற்று.
ஆனாலும், நேற்றைய நிலவரப்படி, பாலத்திலிருந்த வாகனங்களும் போராட்டக்காரர்களும் அகற்றப்பட்டாலும், வெகு நேரம் வரை பொலிசார் அந்தப் பாலத்தில் போக்குவரத்தை அனுமதிக்கவில்லை என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.