அவசர நிலை பிரகடனம் செய்துள்ள கனேடிய மாகாணம்... உயிர் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் மழையால் ஏற்பட்ட வரலாறு காணாத பெருவெள்ளம் காரணமாக மண் சரிவு ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், உயிர் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மாகாண பிரீமியரான John Horgan, அவசர நிலை பிரகடனம் செய்துள்ளதுடன், மக்கள் பயணம் செய்ய தடையும் விதித்துள்ளார்.
இன்னொரு பக்கம், மக்களை வெளியேற்றுவதற்காகவும், அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்காகவும் பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கு இராணுவம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த தகவலை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதி செய்துள்ளார்.
மண்சரிவு காரணமாக சாலைகளில் சிக்கொண்ட சுமார் 300 பேர் வரை மீட்கப்பட்ட நிலையில், Lillooet என்ற இடத்தில் மண் சரிவில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்துள்ளார். அவரது உடல் தற்போது மீட்கப்பட்டுள்ளது. அத்துடன், மேலும் நான்கு பேரைக் காணவில்லை என்பதால், உயிர்பலி அதிகரிக்கலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
உணவுப்பொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற பயத்தால் மக்கள் உணவுப்பொருட்களை வாங்கிக் குவிப்பதால் பல்பொருள் அங்காடிகள் காலியாக உள்ளன. தேவைக்கு அதிகமாக மக்கள் பொருட்களை வாங்கிக் குவிக்கவேண்டாம். ஒரு வீட்டுக்கு 48 முட்டைகள் தேவையில்லை, ஒரு டஜன் போதும் என பிரீமியர் கோரிக்கை விடுக்கும் அளவுக்கு நிலைமை காணப்படுகிறது.
மண் சரிவால் முக்கிய சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், வாகனங்களில் பயணம் செய்யும் வான்கூவர் செல்லவேண்டியவர்கள் மற்றும் வான்கூவரிலிருந்து பயணம் செய்பவர்கள், தெற்கு நோக்கி பயணித்து, அமெரிக்காவுக்குச் சென்று கனடாவுக்கு திரும்பி வரவேண்டிய ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோல் ரயில் பாதைகளும் மண் சரிவால் பாதிக்கப்பட்டுள்ளதால் வான்கூவரிலிருந்தும், வான்கூவருக்கும் ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
சென்ற வாரம் ஒரு அரிய சுழல் காற்று வான்கூவரை கடந்து சென்றது நினைவிருக்கலாம். அத்துடன், வான்கூவரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், ஒரு மாதத்தில் பெய்யவேண்டிய மழை, அதாவது 250 மில்லிலிற்றர் மழை, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் கொட்டித் தீர்த்ததால் ஏற்பட்ட பெருவெள்ளமே இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம்.