தனது படகு தலைப்புச் செய்தியானதற்காக வருந்தும் கனேடியர்... பின்னணியில் ஒரு சோகக்கதை
வான்கூவரிலுள்ள தன் வீட்டிலிருந்தபடி தொலைக்காட்சியில் வெளியான அந்த செய்தியை சோகத்துடன் கவனித்துக்கொண்டிருக்கிறார் Peter White-Robinson (73).
அந்த செய்தியில், Kahu என்ற உல்லாசப்படகு, ஐரோப்பா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் தலைப்புச் செய்தியாக கவனம் ஈர்த்துள்ளதைக் குறித்த விவரம் அலசி ஆராயப்படுகிறது.
கரீபியன் கடற்பகுதியிலிருந்து ஆங்கிலக் கால்வாய்க்குள் நுழையும் அந்த படகைக் குறித்து அவுஸ்திரேலிய அதிகாரிகள் பிரித்தானிய எல்லைப் படைக்கு ஒரு முக்கிய துப்புக் கொடுத்திருக்கிறார்கள்.
அதன்படி, நேற்று பிரித்தானிய பொலிசார் அந்த படகில் ஏறி அதை சோதனையிடுகிறார்கள். அவர்களுக்குக் கிடைத்த துப்பு சரிதான்... அந்த படகில் 2,000 கிலோ கொக்கைன் தண்ணீர் புகாத பைகளில் அடைக்கப்பட்டு அடுக்கிவைக்கப்பட்டிருக்கிறது. அதன் மதிப்பு 280 மில்லியன் டொலர்கள்!
ஒரு பிரித்தானியர், ஐந்து நிகராகுவா நாட்டவர்கள் என மொத்தம் ஆறு பேர் கைது செய்யப்படுகிறார்கள்.
சரி, அந்த செய்திக்கும் வான்கூவரில் வாழும் Peterக்கும் என்ன சம்பந்தம்?
வெற்றிகரமான பிஸினஸ்மேன் மற்றும் பொறியாளராக இருந்த Peter அந்த படகை நியூசிலாந்து கடற்படையிடமிருந்து வாங்கியிருந்தார். அவரும் அவரது காதல் மனைவி Sharonனுமாக அந்த படகை மறுவடிவமைத்தார்கள்.
சாப்பிடவும், தூங்கவும், அப்போது 12 மற்றும் 13 வயதிலிருந்த தங்கள் பிள்ளைகள் படிக்கவும் வசதியாக அந்த படகை ஒரு வீடு போலவே மாற்றி அதில் உலகைச் சுற்றிவந்தார்கள் Peter, Sharon தம்பதி.
அவர்கள் கனடாவின் வான்கூவரை வந்தடைந்தபோது அவரது படகு கட்டும் நிறுவனம் நிதி நெருக்கடிக்கு ஆளாக, அவரது படகு உட்பட அனைத்தையும் இழக்கும் ஒரு நிலை ஏற்பட்டது. பிறகு Peter பொறியாளராக ஒரு நிறுவனத்தில் வேலை தேடிக்கொள்ள, Sharon உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். புற்றுநோயால் அவர் இறந்துவிட தங்கள் சொந்த நாடான நியூசிலாந்துக்கு திரும்பும் என்ணத்தைக் கைவிட்டு கனடாவிலேயே தங்கிவிட்ட Peterஇன் பிள்ளைகள் கனேடியர்களாகவே ஆகிவிட்டார்கள்.
இப்படிப்பட்ட ஒரு நிலைமையில்தான், ஒரு காலத்தில் தன் குடும்பம் ஆசையாக வைத்திருந்த தங்கள் படகு இப்போது போதைப்பொருள் கடத்தலில் சிக்கியுள்ளதைக் குறித்த செய்தியை கவலையுடன் பார்த்துக்கொண்டிருக்கிறார் Peter.
மீண்டும் தன் படகை வாங்கவேண்டுமென்ற ஆசை தனக்கு இருக்கிறது என்று கூறும் Peter, ஆனால் அதை வாங்கும் நிலையில் தான் இப்போது இல்லை என்கிறார்.