குடும்பத்துக்கு உணவளிப்பது கஷ்டமாக உள்ளது... கனேடியர்கள் தெரிவித்துள்ள கவலையளிக்கும் தகவல்
கனடாவில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், ஆய்வில் பங்கேற்ற ஒரு குறிப்பிட்ட பிரிவினரில் 94 சதவிகிதம்பேர், தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு உணவளிப்பது கடினமாக உள்ளதாக தெரிவித்துள்ள விடயம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மிக மோசமான நிதி நிலைமை
The Angus Reid Institute என்னும் அமைப்பு சமீபத்தில் கனடாவில் ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வில் 1,600 கனேடியர்கள் பங்கேற்றனர்.
ஆய்வில் பங்கேற்றவர்களில், மூன்று பேரில் ஒருவர், தங்கள் நிதி நிலைமை மோசமாக, அல்லது மிக மோசமான நிலைமையில் உள்ளதாக தெரிவித்தனர்.
அப்படி தங்கள் நிதி நிலைமை மிக மோசமாக உள்ளதாக கூறியவர்களில் 94 சதவிகிதம்பேரும், தங்கள் நிதி நிலைமை மோசமாக உள்ளதாக தெரிவித்தவர்களில் 80 சதவிகிதம்பேரும், தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு உணவளிப்பது கடினமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சேமிப்பிலிருந்து பணம் எடுத்து செலவு செய்யும் கனேடியர்கள்
அத்துடன், 40 சதவிகிதத்தினர், தங்கள் சேமிப்பில் வைத்திருந்த பணத்தை எடுத்து செலவு செய்வதாகவும், 35 சதவிகிதத்தினர், சமீபத்தில் தங்கள் சேமிப்பு கணக்கிற்கு பணம் செலுத்தவில்லை என்றும் கூறியுள்ளனர்.
The Angus Reid Institute அமைப்பின் ஆய்வில், பத்தில் ஒருவர் தங்கள் நிதி நிலைமை காரணமாக நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களிடம் கடன் வாங்குவதாகவும், 11 சதவிகிதத்தினர் சொத்துக்களை விற்றுள்ளதாகவும், 8 சதவிகிதத்தினர் வங்கிக் கடனுக்கு முயற்சித்துவருவதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.