பல ஆண்டுகளாக வீசிய நாற்றம்: கனேடிய கிராமம் ஒன்று எடுத்துள்ள முடிவு
கனேடிய கிராமம் ஒன்றில், மீன் சாஸ் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றிலிருந்து பல ஆண்டுகளாக துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்த நிலையில், அது தொடர்பில் உள்ளூர் நிர்வாகம் நல்ல முடிவொன்றை எடுத்துள்ளது.
பல ஆண்டுகளாக வீசிய நாற்றம்
கனடாவின் நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடார் மாகாணத்தில், செயிண்ட் மேரீஸ் என்னும் சிறு கிராமம் ஒன்று உள்ளது.
அந்த கிராம மக்கள், பல ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பிரச்சினையை சந்தித்துவந்துள்ளார்கள்.

அதாவது, அங்கு ஒரு மீன் சாஸ் தயாரிக்கும் தொழிற்சாலை இருந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன் அந்த தொழிற்சாலை நிர்வாகம் அந்த தொழிற்சாலையை கைவிட்டுச் சென்றுள்ளது.

அப்போது, அந்த தொழிற்சாலை உரிமையாளர்கள், சுமார் 11,000 லிற்றர் கொள்ளளவு கொண்ட, 110 டேங்குகளிலிருந்த மீன் சாஸை அப்படியே விட்டுச் சென்றுள்ளார்கள்.
காலப்போக்கில் ஜன்னல்கள், கதவுகள், கூரை, சுவர்கள் என அந்த தொழிற்சாலைக் கட்டிடம் சிதிலமடைய, மீன் சாஸ் டேங்குகளில் சாஸை நொதிக்கச் செய்வதற்காக சேர்க்கப்பட்ட பாக்டீரியா தவறாமல் தன் பணியைச் செய்ய, அழுகிய மீன் சாஸிலிருந்து கடும் நாற்றம் வீசத்துவங்கியுள்ளது.
பல ஆண்டுகளாக மக்கள் அந்த துர்நாற்றத்தால் அவதியுற்றுவந்த நிலையில், தற்போது உள்ளூர் நிர்வாகம் அது தொடர்பில் ஒரு நல்ல முடிவெடுத்துள்ளது.
ஆம், தாங்களே அந்த மீன் சாஸை அங்கிருந்து அகற்றி, பிரம்மாண்ட பள்ளம் ஒன்று தோண்டி, அதில் ஊற்றி மண்ணைப் போட்டு மூடிவிட உள்ளூர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளார்கள்.
ஆக, இத்தனை ஆண்டுகளாக நாற்றத்தால் தவித்துவந்த மக்களுக்கு விரைவில் அதிலிருந்து விடுதலை கிடைக்கப்போகிறது!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |