கரடிகளுக்கு உணவளித்த பெண்ணால் உருவான பிரச்சினை... அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை
கனேடிய நகரம் ஒன்றில், பெண் ஒருவர் கரடிகளுக்கு உணவளிப்பதாக வனத்துறைக்கு புகார் வந்துள்ளது.
விசாரணையில், Whistler என்ற இடத்தில் வாழும் Zuzana Stevikova என்ற பெண், கருப்புக் கரடிகளுக்கு உணவளித்து வந்தது தெரியவந்துள்ளது.
அதற்காக அவர் வாரத்துக்கு 50 பவுண்டுகள் கேரட், 180 முட்டைகள், பத்து பெட்டி ஆப்பிள்கள் ஆகியவற்றை வாங்கியுள்ளார்.
அவர் கரடிகளுக்கு உணவளிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து மூன்று கரடிகள் வழக்கமாக குறிப்பிட்ட பகுதிக்கு வரத் தொடங்கியுள்ளன.
இந்த விடயம் தெரிந்ததும், அதிகாரிகள் அந்த மூன்று கரடிகளையும் கருணைக்கொலை செய்துள்ளார்கள். பிரச்சினை என்னவென்றால், Zuzana அந்த கரடிகளுக்கு உணவளிக்கத் தொடங்கியதால், அவற்றிற்கு மனிதர்கள் மீதான அச்சம் போய்விட்டிருக்கிறது. அங்கு வருவதற்காக அக்கம்பக்கத்திலுள்ள பல இடங்களை நாசம் செய்யத் தொடங்கியுள்ளன அந்த கரடிகள்.
மனித உணவை ருசிபார்த்த வன விலங்குகள் மீண்டும் மக்கள் வாழும் பகுதிகளுக்குள் ஊடுருவும் என்பதால் பொதுமக்களுக்கும் ஆபத்து உள்ளது.
எனவே, வன உயிர்கள் சட்டத்தை மீறியதுடன், பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் Zuzana மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு 60,000 டொலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.