தரையிறங்கும் விமானம் மோதி இளம்பெண் உயிரிழப்பு... கனடாவில் ஒரு அதிர்ச்சியளிக்கும் சம்பவம்
கனடாவின் விமான ஓடுதளம் ஒன்றில் தரையிறங்கும்போது, விமானம் ஒன்று இளம்பெண் ஒருவர் மீது மோதியதில் அவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
மொன்றியலுக்கு வடக்கே உள்ள விமான ஓடுதளம் ஒன்றின் அருகே 27 வயது பெண் ஒருவர் புல் வெட்டும் ட்ராக்டர் மூலம் புல்வெளியை சமப்படுத்திக்கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது, ஓடுதளத்தில் இறங்குவதற்காக கீழ் நோக்கி வந்துகொண்டிருந்த ஒரு சிறிய ரக விமானம் ஒன்று அவர் மீது மோதியுள்ளது.
இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த அந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.
அந்த விபத்தைப் பார்த்ததால், விமானத்தை இயக்கிய விமானியும் அதிர்ச்சியடைந்ததால், அவரும் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். இந்நிலையில், உண்மையில் விபத்து நடந்த இடத்தில் என்ன நடந்தது என்பதைக் கண்டறிய பல வாரங்கள் அல்லது மாதங்கள் கூட ஆகலாம் என கருதப்படுகிறது.