காஸாவில் இதுவரை 18 குடும்ப உறுப்பினர்களை இழந்தேன்... கதறும் கனேடிய பெண்
காசா பகுதியில் குடும்ப ஊறுப்பினர்களைக் கொண்ட கனேடிய பெண் ஒருவர், தனது உறவினர்களை மீண்டும் பார்க்க முடியுமா என தெரியவில்லை என்று கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.
18 பேர்களை இழந்துவிட்டேன்
காஸா மீது முழு வீச்சிலான தரைவழி தாக்குதலை முன்னெடுக்கும் நோக்கில் இஸ்ரேல் நிர்வாகம் ஒட்டுமொத்த பாலஸ்தீனத்தில் தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவைகளை துண்டித்திருந்தது.
ஆனால் அந்த நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது சேவைகள் திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ஒன்ராறியோவில் வசிக்கும் Riham Balousha என்ற பெண்மணி தெரிவிக்கையில்,
இஸ்ரேல் - ஹமாஸ் போரினால் இதுவரை குடும்ப உறுப்பினர்கள் 18 பேர்களை இழந்துவிட்டேன் என்றார். கடந்த இரண்டு வாரங்கள் மிகவும் கடினமாக இருந்ததாக கூறும் அவர், குறிப்பாக தனது அன்புக்குரியவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாமல் போனது என்றார்.
சில நாட்களுக்கு முன்பு, தனது தாத்தா இன்னும் உயிருடன் இருப்பதாக கூறி தனது தாயாரை தொடர்பு கொண்டதாக பலுஷா தெரிவித்துள்ளார். 2.3 மில்லியன் மக்கள்தொகை கொண்ட காசா பகுதி, அக்டோபர் 7ல் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு முற்றுகைக்கு உட்பட்டுள்ளது.
எண்ணிக்கை 8,000 கடந்துள்ளது
காஸா பகுதியில் இஸ்ரேல் முன்னெடுப்பது உண்மையில் இன அழிப்பு என குறிப்பிட்டுள்ள பலுஷா, மக்களுக்கு அடிப்படை தேவைகளை மறுப்பதும் போர் குற்றந்தான் என்றார்.
இதையே தான் ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைன் தொடர்பிலும் கூறியுள்ளது என்றார். காஸா பகுதியில் இஸ்ரேல் தாக்குதலுக்கு கொல்லப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 8,000 கடந்துள்ளது.
சுமார் 1,700 பேர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, ஹமாஸுக்கு எதிரான போரில் இராணுவம் இரண்டாம் கட்டத்திற்கு நுழைந்துள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சனிக்கிழமை மாலை தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |