மஞ்சள் காமாலை நோய் காரணமாக மோசமான வகையில் வேலையை விட்டு துரத்தப்பட்ட கனேடிய பணியாளர்
கனேடியர் ஒருவருக்கு ஒருவகை மஞ்சள் காமாலை தொற்றியது தெரியவந்ததையடுத்து அவர் அவமதிக்கப்படும் வகையில் வேலையை விட்டு துரத்தப்பட்டார்.
கட்டுமானப் பணியின்போது காயம்
வான்கூவரில், Path General Contractors என்னும் நிறுவனத்துக்காக பணியாற்றிவந்துள்ளார் கனேடியர் ஒருவர். அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை, அவர் Mr. D என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளார்.
கட்டுமானப் பணியின்போது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. முதலுதவிக்காக அங்குள்ள மருத்துவ அலுவலரை அணுகியுள்ளார் Mr. D.
அப்போது, தனக்கு ஹெப்பட்டைடிஸ் C என்னும் ஒருவகை மஞ்சள் காமாலை தொற்று இருந்ததாக தெரிவித்துள்ளார் அவர்.
அவமானப்படுத்திய அலுவலர்
அந்த மருத்துவ அலுவலரோ, சத்தமாக எல்லாரும் கேட்கும் விதத்தில், Mr. Dக்கு மஞ்சள் காமாலை தொற்றாம், உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டு, அவரை வேலையை விட்டு அனுப்பவேண்டும் என்று கூறியதுடன், சில மோசமான வார்த்தைகளையும் சேர்த்து கூறியிருக்கிறார். உடனே மற்றவர்களும் அவரைக் குறித்து முறுமுறுத்திருக்கிறார்கள்.
மறுநாள் Mr. D பணிக்கு வந்து சேர்ந்த நேரத்தில், அவருக்கு அவரது பணி கண்காணிப்பாளரிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், மஞ்சள் காமாலை இருப்பதை மறைத்ததால் Mr. D பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருக்கிறது.
அவமானத்தால் நொந்துபோன Mr. D, தன் நண்பர்கள், உறவினர்களிடமிருந்து தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கிறார்.
மனித உரிமைகள் தீர்ப்பாயத்தின் உத்தரவு
தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக மனித உரிமைகள் தீர்ப்பாயத்திடம் புகாரளித்துள்ளார் Mr. D. புகாரை விசாரித்த தீர்ப்பாயம், Mr. D நடத்தப்பட்ட விதம் கொடுமையானது, அது அவரது சுயமரியாதை மற்றும் குடும்ப உறவுகளை கடுமையாக பாதித்துள்ளது என்று கூறி அவருக்கு Path General Contractors இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, Mr. Dக்கு சுமார் 65,000 டொலர்கள் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.