16 பேர் உயிரிழப்பதற்கு காரணமான விபத்தை ஏற்படுத்திய இந்தியர்: நாடு கடத்துவது தொடர்பாக கனேடியர்களின் மாறுபட்ட கருத்து
ட்ரக் சாரதியான இந்தியர் ஒருவர் ஏற்படுத்திய விபத்து 16 பேர் உயிரிழப்பதற்கும் 13 பேர் காயமடைவதற்கும் காரணமாக அமைந்தது.
நிரந்தர கனேடிய வாழிட உரிமம் பெற்று கால்கரியில் வாழ்ந்துவந்த Jaskirat Singh Sidhu (33)க்கு அப்போதுதான் திருமணமாகியிருந்தது.
2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், Saskatchewan பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த Sidhuவின் ட்ரக், ஜூனியர் ஹாக்கி அணியின் வீரர்கள் மற்றும் அலுவலர்களை சுமந்து வந்த பேருந்து ஒன்றின்மீது மோதியது.
இந்த கோர விபத்தில், 16 பேர் கொல்லப்பட்டார்கள், 13 பேர் காயமடைந்தார்கள். அபாயகரமாக வாகனம் ஓட்டி மரணத்தை விளைவித்ததாக Sidhu மீது குற்றம் சாட்டப்பட்டு, அவருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இதற்கிடையில், அவரை இந்தியாவுக்கு நாடுகடத்தலாமா அல்லது கனடாவில் வாழ அனுமதிக்கலாமா என்பது குறித்த அறிக்கை ஒன்றை கனடா எல்லை பாதுகாப்பு ஏஜன்சி தயாரித்து அளிக்க வேண்டியுள்ளது. அதற்கான ஆவணங்களை நவம்பர் மாதம் 28ஆம் திகதி சமர்ப்பிக்கவேண்டிருந்த நிலையில், அதை சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
ஏஜன்சி முதலில் அறிக்கை அளித்து நீண்ட கால இடைவெளி ஏற்பட்டுவிட்டதால், Sidhuவை நாடுகடத்தலாமா அல்லது கனடாவில் வாழ அனுமதிக்கலாமா என்பது குறித்து முடிவெடுக்கும் முன், அந்த அறிக்கையில் புதிதாக தற்போது எதையாவது சேர்க்க விரும்பினால் அதற்காக வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது என்கிறார் கால்கரி புலம்பெயர்தல் சட்டத்தரணியான Michael Greene.
இதற்கிடையில், Sidhuவை நாடுகடத்துவது தொடர்பில் மக்களிடையே மாறுபட்ட கருத்து நிலவுகிறது.
சம்பந்தப்பட்ட விபத்தில் பலியான இளைஞர்களின் பெற்றோர் சிலர் அவரை நாடு கடத்தவேண்டாம் என தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த Evan என்ற இளைஞரின் தந்தையான Scott Thomas, இனி Sidhuவால் மீண்டும் ஒரு ட்ரக்கை இயக்கமுடியாது என்றும், நடந்த தவறை திருத்த முடியுமானால், அதற்காக Sidhu என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறார் என்பதும், அவர்களுக்கு பதிலாக தன் உயிரையும் கொடுக்க அவர் தயாராக இருப்பார் என்பதும் தனக்குத் தெரியும் என்று கூறியுள்ளார்.
அதே நேரத்தில், அதே விபத்தில் உயிரிழந்த Jaxon என்ற இளைஞரின் தந்தையான Chris Joseph என்பவரோ, Sidhuவை நாடு கடத்தவேண்டும் என கோரியுள்ளவர்களில் ஒருவர் ஆவார்.
சட்டம் எல்லோருக்கும், எல்லா காரணங்களுக்காகவும் ஒன்றுதான் என்று கூறியுள்ள அவர், 29 குடும்பத்தினர் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளதை நான் பாராட்டுகிறேன். ஆனால், எனது பார்வையில் நாடுகடத்துதல் என்பது மன்னிப்பதைக் குறித்த விடயம் அல்ல. அது நீங்கள் ஒருவரைக் குறித்து எப்படி உணர்கிறீர்கள் என்பதைக் குறித்ததல்ல, அவர் ஒரு ஒரே ஒரு தவறுதான் செய்தார் என்று நீங்கள் நினைப்பதைக் குறித்ததும் அல்ல.
அவர் நாடு கடத்தப்படுவாரானால், ஒருவேளை அவரை மன்னிப்பது குறித்து ஒரு வேளை நான் எண்ணலாம், ஆனால், அவர் நாடுகடத்தப்படவில்லையானால், அது எங்களை மேலும் காயப்படுத்தக்கூடும். அப்படி ஒரு நிலை எங்களுக்கு ஏற்படவேண்டாம் என்று நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், Sidhu ஜாமீன் கோரவுமில்லை.
அவர் இப்போதைக்கு கனடாவை விட்டு வெளியேற வாய்ப்பில்லை என்கிறார் கால்கரி புலம்பெயர்தல் சட்டத்தரணியான Michael Greene.