புலம்பெயர்வோரால் கனடாவுக்கு இலாபமா நஷ்டமா?: கனேடியர்களின் கருத்துக்கள்
பெரும்பாலான கனேடியர்கள் புலம்பெயர்வோரால் நாட்டின் பொருளாதாரத்துக்கு நன்மையே என்றும், அவர்கள் நாட்டின் மக்கள்தொகை வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் கருதுகிறார்கள் என ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
கொரோனா சூழலையும் தாண்டி பெரும்பாலான கனேடியர்கள் புலம்பெயர்தல் குறித்து நேர்மறையாக கருத்துக்களையே கொண்டிருப்பதாக Environics Institute என்ற அமைப்பு மேற்கொண்ட ஆய்விலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.
2021 செப்டம்பர் 7க்கும் 23க்கும் இடையில், Environics Institute நிறுவனம், புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் குறித்த கனேடியர்களின் பார்வை கடந்த ஆண்டிலிருந்ததிலிருந்து மாறியுள்ளதா என்பதை அறிவதற்காக 2,000 கனேடியர்களிடம் ஆய்வு மேற்கொண்டது.
ஆய்வின் முடிவுகள், புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் குறித்த கனேடியர்களின் பார்வை கடந்த 12 மாதங்களில் பெருமளவில் மாறாமலேயே உள்ளது என்பதைக் காட்டுவதாகவே உள்ளன.
பெரும்பாலான கனேடியர்கள், நாட்டில் தற்போதிருக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கைக்கு ஆதரவாகவே உள்ளனர், அவர்கள் புலம்பெயர்வோரால் நாட்டின் பொருளாதாரத்துக்கு நன்மையே என்றும், அவர்கள் நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் கருதுகிறார்கள் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
கனடாவில் அளவுக்கு மீறிய புலம்பெயர்தல் காணப்படுகிறது என்ற கருத்தை பெரும்பாலான கனேடியர்கள் ஒப்புக்கொள்ளவில்லை
கனேடியர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் அல்லது 65 சதவிகிதத்தினர், கனடாவில் அளவுக்கு மீறிய புலம்பெயர்தல் காணப்படுகிறது என்ற கருத்தை நிராகரித்துள்ளனர். 2020 செப்டம்பரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலும் இதே எண்ணிக்கையிலானவர்கள் இதே கருத்தைக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால், வெளிநாடு ஒன்றில் பிறந்த முதல் தலைமுறை கனேடியர்களின் பார்வை மாறியுள்ளது. அவர்களில் இந்த கருத்துடன் ஒத்துப்போவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் 9 சதவிகிதம் அதிகரித்துள்ளது. வெளிநாடு ஒன்றில் பிறந்த முதல் தலைமுறை கனேடியர்களில் 36 சதவிகிதத்தினர் இந்த கருத்தை ஆமோதிக்க, கனடாவில் பிறந்த முதல் தலைமுறை கனேடியர்களில் இந்த கருத்தை ஆமோதிப்பவர்களின் எண்ணிக்கை 27 சதவிகிதமாக உள்ளது.
அத்துடன், கனடாவில் அளவுக்கு மீறிய புலம்பெயர்தல் காணப்படுகிறது என்ற கருத்து, கனடாவிலுள்ள அரசியல் கட்சிகளைப் பொருத்தும் மாறுபடுகிறது.
லிபரல் கட்சியின் ஆதரவாளர்களில் 75 சதவிகிதத்தினரும், நியூ டெமாக்ரட் கட்சியினரில் 81 சதவிகிதத்தினரும் கனடாவில் புலம்பெயர்ந்தோரின் அளவு குறித்த கருத்துடன் ஒத்துப்போகிறார்கள்.
கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆதரவாளர்களில் 54 சஹவிகிதத்தினரும், Bloc Québécois கட்சியின் ஆதரவாளர்களில் 70 சதவிகிதத்தினரும் புலம்பெயர்ந்தோரின் அளவு போதுமானதாகிவிட்டது என்று கருதுகிறார்கள்.
2021-2023 புலம்பெயர்தல் அளவுத் திட்டத்தின் கீழ், 401,000 புதிய புலம்பெயர்வோரை கனடாவுக்கு வரவேற்க கனடா இலக்கு நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலான கனேடியர்கள், மக்கள்தொகையை அதிகரிப்பதற்கு புலம்பெயர்தல் அவசியம் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள்
ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் 57 சதவிகிதம் பேர், கனடாவின் மக்கள்தொகையை அதிகரிக்க, கனடாவுக்கு அதிக புலம்பெயர்தல் தேவை என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்கள். 37 சதவிகிதம் பேர் அதற்கு எதிரான கருத்தைத் தெரிவித்துள்ளார்கள், 6 சதவிகிதத்தினருக்கு அதைக் குறித்த தெளிவான கருத்து இல்லை.
2020இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலும் இதே முடிவுகள்தான் எட்டப்பட்டன.
புலம்பெயர்தல், பொருளாதாரத்துக்கு நல்லது என பெரும்பாலான கனேடியர்கள் கருதுகிறார்கள்.
80 சதவிகித கனேடியர்கள்பொருளாதாரத்தின்மீது புலம்பெயர்தலின் தாக்கம் நேர்மறையானது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். ஆனாலும், இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட குறைந்துள்ளது.
சொல்லப்போனால், 76 சதவிகித கனேடியர்கள், கனடா அரசு, கூடுதல் தொழில் முனைவோரை புலம்பெயர ஊக்குவிக்கவேண்டும், அவர்கள் கனடாவில் புதிதாக தொழில் துவங்கவேண்டும் என்ற கருத்துடன் ஒத்துப்போகிறார்கள். 39 சதவிகிதம் பேர் இந்த கருத்தை பலமாக ஆதரிக்கிறார்கள்.
மொத்தத்தில், பொருளாதாரத்தைக் குலைத்துப்போட்ட கொரோனா காலகட்டத்தில் பல நாடுகளின் மன நிலை மாறியபோதிலும், புலம்பெயர்தல் குறித்த கனேடியர்களின் திறந்த மனப்பான்மை தொடர்கிறது.
கனேடியர்கள் தங்கள் நாட்டின் பலதரப்பட்ட கலாச்சாரம், புதிதாக வருபவர்களை ஏற்றுக்கொள்ளுதல் போன்ற நற்பண்புகளைத் தொடர்ந்து ஆமோதிக்கிறார்கள். சொல்லப்போனால், கனெடியர்களில் யாரும் புலம்பெயர்தலை ஒரு பெரிய பிரச்சினையாக பார்க்கவில்லை என்றே இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.