வெளிநாடு செல்ல விரும்பும் கனேடியர்களுக்கு Omicron தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடாவில் தொடர்ந்து கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், Omicron அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாடு செல்வது தொடர்பில் நிலவும் அபாயங்கள் குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
இந்நிலையில், கனடாவுக்கு வெளியே சூழ்நிலை நன்றாக இல்லை. ஆகவே, நீங்கள் வெளிநாடு பயணம் செல்வது குறித்து திட்டமிட்டால், இப்போதைக்கு அது மிகவும் அபாயமான ஒன்றாகும் என்று கூறியுள்ளார் பெடரல் சுகாதாரத்துறை அமைச்சரான Jean-Yves Duclos.
அத்துடன், வெளிநாடுகளிலிருந்து கனடா திரும்புவோரும், விமான நிலையங்களில் கால தாமதங்களை சந்திக்க நேரும் என எச்சரிக்கும் அவர், வெளிநாடு செல்ல விரும்புவோரும் கவனமாக முடிவெடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச பயணத்துக்குத் திட்டமிடுவோர், முன்கூட்டியே திட்டமிடுமாறும், விமான நிலையங்களில் தாமதங்களை எதிர்பார்க்குமாறும், தனிமைப்படுத்தலுக்கான திட்டத்தைக் கைவசம் வைத்திருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார் அவர். நீங்கள் கொரோனா பரிசோதனைகளை முழுமையாக செய்தீர்களா என்பதை அறிவதற்காக அதிகாரிகள் உங்களை தொடர்பு கொள்வார்கள், அதையும் எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும் என்றும் Duclos கூறியுள்ளார்.
Omicron வகை மரபணு மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அது பரவாமல் தடுக்கும் நோக்கில், கனடா அரசு பயணக் கட்டுப்பாடுகளை விரைந்து அறிவித்தது. பாதிக்கப்பட்ட 10 ஆப்பிரிக்க நாடுகளிருந்து வருவோருக்கு தடை விதித்ததும் அதில் அடக்கம்.
இதுவரை கனடாவில் 87 பேருக்கு Omicron வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் சர்வதேச பயணத்துடனோ, அல்லது பயணிகளுடனோ தொடர்புடையவர்கள்.
உலகில் தொற்றுநோய்ச் சூழல் எவ்வளவு விரைவாக மாறலாம் என்பதற்கு இந்த Omicron ஒரு உதாரணம் என்று கூறியுள்ள Duclos, நாம் அதற்கும் தயாராக இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், கனடா அரசு கனேடியர்கள் வெளிநாடு செல்வதைத் தவிர்க்குமாறு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடவில்லை. ஆனால், அதுவும் நடக்கலாம் என்கிறார் Duclos.
ஆனாலும் வெளிநாடு சென்றே தீரவேண்டும் என விரும்பும் கனேடியர்களுக்கு, வெளிநாடுகளில் நிலைமை மிகவும் அபாயகரமானதாகவும், நிலையற்றதாகவும் உள்ளது என்ற எச்சரிக்கை செய்தியை தெரிவித்துக்கொண்டுள்ளார் அவர்.