வெயில் காலத்தில் கானல் நீர் சாலைகளில் தெரிகிறது? இது எவ்வாறு உருவாகிறது?
கானல் நீர் என்பது வெப்பமான காலநிலைகளில் பாலைவனங்களிலும், நேரான தார்ப் பாதைகள் போன்றவற்றில் நீர்த்தடாகம் போன்று தோற்றமளிக்கும் தோற்றப்பாடு ஆகும்.
இது வளியில் ஒளியின் ஒளிமுறிவு (ஒளிவிலகல்) மற்றும் முழு அகத் தெறிப்பு நிகழ்ந்து வானின் எதிரொளிப்பால் தோன்றும் ஒரு மாயத்தோற்றம் ஆகும். கோடைக் காலங்களில் மிகுந்த வெப்பங் காரணமாகத் தரையை ஒட்டிய வளிப்படை சூடடைகின்றது இதனால் இப்பகுதியல் உள்ள வளிப்பட்டை அடர்த்தி குறைந்து காணப்படும்.
இந்த நிலமட்டத்திற்கு மேல் உள்ள வளிப்படையின் வெப்பநிலை குறைவடைந்து இருப்பதால் வெவ்வேறு விரிவு நிலையில் வளி காணப்படுகின்றது. இதன் காரணமாக வெவ்வேறு ஊடகம் போல் செயற்படுகின்றது. இதில் ஒளி ஊடுருவும்போது முழு அகத்தெறிப்பு நிகழுவதால் ஒளி முறிவடைந்து போலித் தோற்றப்பாடு நிகழுகின்றது.
கடுமையான கோடைக் காலத்தில் தார் சாலைகளிலும் பாலைவனங்களிலும் கானல் நீரைப் பார்க்க முடியும். தண்ணீர்தான் இருக்கிறது என்று அருகில் சென்றால், இன்னும் சற்றுத் தொலைவில் கானல் நீர் தெரியும்.
இது ஒரு மாயத் தோற்றம். நிலத்தில் இருந்து அதிகமான வெப்பம் மேலே வருகிறது. மேலே இருக்கும் காற்று சற்றுக் குளிர்ச்சியாகக் கீழ் நோக்கி வருகிறது.
இவை இரண்டையும் ஊடுருவிக்கொண்டு சூரிய ஒளிக்கதிர்கள், வெப்பத்திலும் குளிர்ச்சியிலும் வெவ்வேறு வேகத்தில் நுழைகின்றன.
அப்போது ஒளிக்கதிர்கள் வளைகின்றன. இதை நம் மூளை நிலத்திலிருந்து தண்ணீர் தோன்றுவதுபோல் எண்ணிக்கொள்கிறது.