பிரான்சில் குழந்தைக்கு வித்தியாசமான பெயர் வைத்த பெற்றோர் சந்தித்த எதிர்ப்பு: உண்மை வெளியானதும் நிகழ்ந்த மாற்றம்
பிரான்சில் ஒரு தம்பதியர் அவர்களுடைய பிள்ளைக்கு வைத்த பெயர் சர்ச்சையையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியது.
தென்மேற்கு பிரான்சில், Montpon-Ménestérol நகரில் வாழும் அந்த தம்பதியர், 2021இல் பிறந்த தங்கள் மகனுக்கு Dyklan Canard என்று பெயர் வைத்தார்கள். ‘Canard’ என்ற வார்த்தைக்கு பிரெஞ்சு மொழியில் ‘வாத்து’ என்றும் ஒரு அர்த்தம் உண்டு.
அந்த பெயர் குறித்து விமர்சனம் எழுந்த நிலையில், முதலில் உள்ளூர் அதிகாரிகள் அந்த பெயருக்கு மறுப்பு தெரிவித்தார்கள்.
தற்போது, அந்த பெயருக்குப் பின்னால் உள்ள நெகிழ வைக்கும் சம்பவம் குறித்து அறிந்துகொண்டுள்ள நிலையில், அந்த பெயரை சூட்ட அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார்கள்.
குழந்தைக்கு Canard என்று பெயர் வைத்ததால் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, குழந்தையின் தாத்தாவான Jean-Christophe Bret-Canard, அந்த பெயருக்கான பின்னணி குறித்து விளக்கினார்.
தன் தாய்க்கு Madame Canard என்று பெயர் என்று கூறியுள்ள Christophe, அது அவரது குடும்பப் பெயர் என்றும், 1943ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப்போரின்போது அவர் அநாதரவாக விடப்பட்டதாகவும், அவர் அந்த காலகட்டத்தில் மோசமாக நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தேவாலயம் ஒன்றின் வாசற்படியில் போடப்பட்ட அந்த பெண் குழந்தை, பின்னர் ஒரு ஆதரவற்ற இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். அப்போது, அந்தக் குழந்தையை Mr Georges Canard என்பவர் தத்தெடுக்க, அவரது பெயரே அந்த பெண் குழந்தையின், அதாவது Christopheஇன் தாயின் குடும்பப் பெயராகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் அவர். ஆகவே, தன் தாயின் மீதான மரியாதை காரணமாக, தங்கள் குழந்தைகளுக்கு Canard என்ற பெயரை தனது குடும்பம் சூட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார் Christophe.
போர் காலகட்டத்தில், அநாதரவாக விடப்பட்ட ஒரு பெண் குழந்தைக்கு ஆதரவளித்த ஒரு மனிதரின் நினைவாக தாங்கள் அவரது பெயரை தங்கள் பிள்ளைகளுக்கு வைத்துவருவதாகவும் தெரிவித்த அவர், தன்னை அனைவரும் Monsieur Canard என்றே அழைப்பதுண்டு என்கிறார்.
இந்த விவரத்தைக் கூறி, தனது தாயின் அடையாள அட்டையையும் Christophe உள்ளூர் அதிகாரிகளிடம் காட்ட, புரிந்துகொண்ட அவர்கள், தன் பேரனுக்கு Dyklan Canard என்ற பெயரை சூட்ட சம்மதமளித்ததாக தெரிவிக்கிறார் அவர்.