உடலிலுள்ள நல்ல செல்களை தங்களுக்காக வேலைவாங்கும் புற்றுநோய் செல்கள்: ஒரு ஆச்சரிய கண்டுபிடிப்பு
புற்றுநோய் செல்கள், உடலிலுள்ள நல்ல செல்களை தங்களுக்கு சாதகமாக வேலைவாங்குவதாக, பயன்படுத்திக்கொள்வதாக, சுவிஸ் ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
ஒரு ஆச்சரிய கண்டுபிடிப்பு
சுவிட்சர்லாந்தின் சூரிக் மாகாணத்திலுள்ள சுவிஸ் ஃபெடரல் தொழில்நுட்ப நிறுவனமான ETH நிறுவனம் இந்த ஆச்சரிய நிகழ்வைக் கண்டுபிடித்துள்ளது.
தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்கள், தங்கள் செல்லிலுள்ள மைட்டோகாண்ட்ரியாவை தங்களுக்கு அருகிலுள்ள ஆரோக்கியமான செல்களுக்குள் கடத்துவதாகவும், அதனால், அவற்றிற்கு அருகிலுள்ள நல்ல செல்களுக்கும் தோல் புற்றுநோய் பரவுவதாகவும் ETH நிறுவன ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த மைட்டோகாண்ட்ரியா என்னும் செல் உள்ளுறுப்புகள், ஒரு செல்லுக்கு சக்தியைக் கொடுக்கக்கூடியவை என்பதால், அவை செல்களில் ஆற்றல் மையம் என்றே அழைக்கப்படுகின்றன.
பொதுவாக, செல்கள் குணமடையும்போது இப்படி ஒரு செல்லிலுள்ள மைட்டோகாண்ட்ரியா அடுத்த செல்லுக்கு கடத்தப்படும்.
குறிப்பாக, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருடைய உடலிலுள்ள ஆரோக்கியமான நரம்பு செல்கள், பக்கவாதம் காரணமாக பாதிக்கப்பட்ட செல்கள் உயிர் தப்பிப் பிழைப்பதற்காக, அவற்றிற்கு தங்கள் மைட்டோகாண்ட்ரியாவைக் கடத்தும் என ஏற்கனவே ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், தோல் புற்றுநோய் செல்கள், புற்றுநோயைப் பரப்ப இதே செயல்முறையை பயன்படுத்துவது இப்போது ஆய்வில் தெரியவந்துள்ளது.
புற்றுநோய் செல்கள், தங்கள் மைட்டோகாண்ட்ரியாவை தங்களுக்கு அருகிலுள்ள ஆரோக்கியமான செல்களுக்குள் கடத்த, அவை அதிக ஆற்றலையும் வளர்ச்சிக்குத் தேவையான பொருட்களையும் உருவாக்க, புற்றுநோய் வேகமாக பரவத் துவங்குகிறது.
இதே விடயம், மார்பகப் புற்றுநோய் மற்றும் கணைய புற்றுநோயிலும் நடப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மேலும், புற்றுநோய் செல்கள் மைட்டோகாண்ட்ரியாவை அடுத்த செல்லுக்குக் கடத்த MIRO2 என்னும் புரதத்தை பயன்படுத்துகின்றன என்பதையும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், இது ஒரு ஆச்சரிய கண்டுபிடிப்பு மட்டுமல்ல, புற்றுநோய் சிகிச்சையில் பயனுள்ள ஒரு கண்டுபிடிப்பும் ஆகும்.
இந்த விடயத்தை புற்றுநோய் சிகிச்சைக்கும் பயன்படுத்தலாம் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அதாவது, MIRO2 என்னும் புரதத்தை தடுத்து நிறுத்திவிட்டால், புற்றுநோய் செல்களால் மைட்டோகாண்ட்ரியாவைக் கடத்த முடியாமல் போகலாம் என அவர்கள் நம்புகிறார்கள்.
இந்த ரீதியில் ஆய்வகப் பரிசோதனைகள் மேற்கொண்டபோது, சோதனைக்குழாய்களிலும், எலிகள் மீது நடத்தப்பட்ட சோதனைகளிலும் MIRO2 புரதத்தை தடுத்து நிறுத்தும் முயற்சி வெற்றிபெற்றுள்ளதாகவும், இனி மனித செல்களில் அவை சோதிக்கப்படவேண்டும் என்றும் கூறியுள்ள ஆய்வுக்குழு தலைவரான Sabine Werner என்பவர், இந்த சோதனை வெற்றிபெற்றால், புற்றுநோய் சிகிச்சையில் அது நல்ல பலனைக் கொடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
முக்கிய விடயம் என்னவென்றால், இந்த சிகிச்சைமுறை நடைமுறைக்கு வருவதற்கு பல ஆண்டுகள் பிடிக்கக்கூடும் என்பதுதான்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |