ஆகத்து 1 முதல்... சுவிட்சர்லாந்தில் கஞ்சா பயன்பாட்டை எளிதாக்குவதற்கான நடைமுறை அறிமுகம்
ஆகத்து 1ஆம் திகதி முதல் சுவிட்சர்லாந்தில் மருத்துவ பயன்பாட்டுக்காக கஞ்சா வாங்குவதற்கான நடைமுறை எளிதாக்கப்பட உள்ளது.
1951ஆம் ஆண்டு, சுவிட்சர்லாந்தில் கஞ்சா பயன்பாடு சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டது. சில அசாதாரண சந்தர்ப்பங்களில் மட்டும், பெடரல் பொது சுகாதார அலுவலகத்தின் சிறப்பு அனுமதி பெற்று, மருத்துவப் பயன்பாட்டுக்காக கஞ்சா மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.
தற்போது, ஆண்டுதோறும் புற்றுநோய், நரம்பு மண்டல பிரச்சினைகள் முதலான பிரச்சினைகளால் வருந்தும் சுமார் 3,000 பேருக்கு கஞ்சா மருத்துவப் பயன்பாட்டுக்காக வழங்க அனுமதியளிக்கப்பட்டு வருகிறது என்றாலும், அதற்கான நடைமுறை நீளமானதும் செலவுபிடிக்கக்கூடியதுமாகும்.
ஆகவே, மருத்துவப் பயன்பாட்டுக்காக கஞ்சா பயன்பாட்டை எளிதாக்குவதற்காக, சுவிஸ் சட்டத்தில் கஞ்சா பயன்பாட்டின் மீதான தடை நீக்கப்படுகிறது. ஆனாலும், கேளிக்கைக்காக கஞ்சா பயன்படுத்துவது சட்ட விரோதம் என்னும் விதி தொடர்ந்து அமுலில் இருக்கும்.
ஆகவே, இந்த சட்ட மாற்றத்தின்படி, வரும் ஆகத்து மாதம் 1ஆம் திகதியிலிருந்து சுவிட்சர்லாந்திலுள்ள மருத்துவர்கள் பெடரல் சுகாதாரத் துறையின் சிறப்பு அனுமதி இல்லாமலே மருத்துவப் பயன்பாட்டுக்காக கஞ்சாவை பரிந்துரைக்கலாம் என சுவிஸ் பெடரல் கவுன்சில் அறிவித்துள்ளது.