ரஷ்யாவுக்கு சொந்தமான பணத்தைக் கொடுக்கமுடியாது: சுவிட்சர்லாந்து உறுதி
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து பல நாடுகள் ரஷ்யா மீது தடைகள் விதித்தன.
பல நாடுகள் தங்கள் நாட்டிலுள்ள ரஷ்ய சொத்துக்களை முடக்கின. வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டன.
அப்படி முடக்கப்பட்ட பணத்தை, உக்ரைனைக் கட்டி எழுப்ப கொடுக்கவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் யோசனை கூறியது.
8 பில்லியன் டொலர்கள் கேட்ட உக்ரைன்
சுவிட்சர்லாந்தால் முடக்கப்பட்டு சுவிஸ் வங்கிகளில் இருக்கும் 8 பில்லியன் டொலர்களை தங்களுக்குக் கொடுக்குமாறு உக்ரைனும் கேட்கிறது. அந்தப் பணம் கிரெம்ளின் வட்டாரத்துடன் தொடர்புடைய வர்த்தகர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம்.
ரஷ்யாவுக்கு சொந்தமான பணத்தைக் கொடுக்கமுடியாது
ஆனால், அப்படி முடக்கப்பட்ட ரஷ்யாவுக்குச் சொந்தமான பணத்தை உக்ரைனுக்குக் கொடுக்கமுடியாது என சுவிட்சர்லாந்து கூறியுள்ளது.
டாவோஸில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டில் பேசிய சுவிஸ் வெளியுறவு அமைச்சரான Ignazio Cassis, உக்ரைனில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு, அந்த பாதிப்பை ஏற்படுத்தியவர்தான் பொறுப்பேற்கவேண்டுமென்ற விடயத்தை தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும், ஆனாலும், சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை அது சட்டத்திற்குட்பட்டுதான் செயல்படவேண்டியுள்ளது என்றும், இல்லையென்றால், தன் நம்பகத்தன்மையை சுவிட்சர்லாந்து இழக்க நேரிடும் கூறியுள்ளார்.