சுவிஸ் மாகாணமொன்றில் மீண்டும் தொலைபேசி மோசடிகள்: பொலிசார் எச்சரிக்கை
Cantonal police in Valais, have issued urgent warnings regarding a sharp wave of telephone scams: சுவிட்சர்லாந்தின் வாலே மாகாண பொலிசார், வேகமாக பரவிவரும் தொலைபேசி மோசடி ஒன்று தொடர்பில் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
சுவிட்சர்லாந்தில், முதியவர்களைக் குறிவைத்து பல மோசடிகள் நடந்துவருகின்றன. இந்நிலையில், வேகமாகப் பரவிவரும் புதியதொரு மோசடி குறித்து பொலிசார் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
மீண்டும் தொலைபேசி மோசடிகள்
சுவிட்சர்லாந்தின் வாலே மாகாணத்தில், புதிதாக பரவிவரும் மோசடி ஒன்றில் சிக்கி, கடந்த ஒரு வாரத்தில் மட்டும், பொதுமக்கள் சுமார் 150,000 சுவிஸ் ஃப்ராங்குகளை இழந்துள்ளார்கள்.

போலியாக, பொலிசார், வங்கி அதிகாரிகள் மற்றும் தொழில் நிறுவன பிரதிநிதிகள் போல் தங்களைக் காட்டிக்கொள்ளும் மோசடியாளர்கள், மொபைல் காலர் ஐடியில் கூட தாங்கள் உண்மையான அதிகாரிகள் என காட்டும் விதத்தில் மோசடி செய்துள்ளார்கள்.
பொலிசார் அப்படிப்பட்ட சுமார் 30 மோசடியாளர்களைக் கண்டறிந்துள்ள நிலையில், அது குறித்து பொதுமக்களை எச்சரித்துள்ளார்கள். இந்த மோசடியாளர்களைப் பொருத்தவரை, ஒரு விடயம் மட்டும் எப்போதும் மாறாது.
அதாவது, அவர்கள் உடனடியாக உங்களை பணம் அல்லது PIN எண்ணைக் கொடுக்கச் சொல்லி அவசரப் படுத்துவார்கள்.
ஆக, அப்படி அதிகாரிகள் போல் காட்டிக்கொண்டு யாராவது பணம் கொடுக்குமாறு உங்களை வற்புறுத்தினால், அவர்கள் யார் என உங்களுக்கு உறுதியாக தெரியாதபட்சத்தில், அந்த அழைப்பை துண்டித்துவிட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் உங்களுக்கு ஏற்கனவே நன்கு தெரிந்தவர்களை திரும்ப அழைத்து அழைப்பை உறுதி செய்துகொள்ளுமாறு பொலிசார் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.