பூஸ்டர் தடுப்பூசிக்கு இன்னமும் தயாராகாத சுவிஸ் மாநிலங்கள்
சுவிட்சர்லாந்தின் மாநில அதிகாரிகள் 65 வயதிற்குட்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்குவதற்கான தயாரெடுப்பில் இல்லை என தெரிய வந்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் தற்போது 65 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும், பாதிப்பு அபாயம் அதிகமானோருக்கும் பூஸ்டர் தடுப்பூசிகள் உள்ளூர் நிர்வாகத்தினரால் அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, 65 வயதிற்குட்பட்டவர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி எப்போது தயாராகும் என்பது தொடர்பில் சுவிட்சர்லாந்தில் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பல மாநில நிர்வாகங்கள் எதிர்வரும் 2022 வரையில் 65 வயதிற்குட்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசிக்கான வாய்ப்பு இல்லை என்றே கூறி வருகிறது.
தற்போது பதிவு செய்து கொண்டுள்ள மக்களுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகை வரையில் காத்திருக்கவும் கோரப்படுகிறது. பெர்ன் மாநிலத்தில் தடுப்பூசி மையங்களை மூடியுள்ளதாகவும், பெரும்பாலான மையங்கள் பூட்டப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.
இதனிடையே, மாநில நிர்வாகத்தின் மெத்தனம் தொடர்பில் மருத்துவர்கள் விமர்சித்துள்ளனர்.
ஒட்டுமொத்த மக்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி அளிக்க சுவிஸ் இராணுவம் களமிறங்கினால் மட்டுமே காலதாமதமின்றி முடிக்க முடியும் எனவும் மருத்துவர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.