நகை கடைக்குள் காருடன் பாய்ந்த சுவிஸ் இளைஞர்: அவர் சொன்ன விசித்திர காரணம்
சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மண்டலத்தில் நகை கடைக்குள் காரை மோதவிட்ட சம்பவத்தில், அதன் சாரதி பொலிசாரிடம் விளக்கமளித்துள்ளார்.
ஆராவ் பகுதியில் நகை கடை ஒன்றில் புதன்கிழமை கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று பாய்ந்ததில், ஐவர் லேசான காயங்களுடன் தப்பினர்.
அந்த மெர்சிடிஸ் பென்ஸ் வாகனமானது பலத்த சேதமடைந்தது. மட்டுமின்றி சேதம் மட்டும் 100,000 பிராங்குகள் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், குறித்த விபத்தை ஏற்படுத்திய 19 வயது சாரதி, நடந்த சம்பவம் தொடர்பில் பொலிசாரிடம் விளக்கமளித்துள்ளார்.
சம்பவத்தின் போது தமது காரின் முன்பு முன்னாள் காதலியின் கார் சென்று கொண்டிருந்ததாகவும், அவரை முந்திச் செல்ல பல முறை முயன்றும், முடியாமல் போனதாகவும்,
அவர் வேகமாக செல்ல, தாமும் வேகமாக வாகனத்தை செலுத்தியதாகவும், ஒருகட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த தமது வாகனம் நகை கடைக்குள் மோதி நின்றதாக பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
தற்போது சாரதிக்கான உரிமத்தை பொலிசாரிடம் அவர் ஒப்படைத்துள்ளதாகவும், அவரது வாகனத்தை பொலிசார் பறிமுதல் செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
ஆஃப்கான் நாட்டவரான அந்த இளைஞர் நகை கடை உரிமையாளரிடம் மன்னிப்பும் கோரியுள்ளார்.
இருப்பினும் அவர் மீது சட்ட நடவடிக்கைகள் தொடரும் என்றே தெரிய வந்துள்ளது.