பிரித்தானியாவில் தற்கொலைகுண்டுதாரியுடன் வெடித்துச் சிதறும் கார்: கமெராவில் சிக்கிய அதிரவைக்கும் காட்சி
பிரித்தானிய மருத்துவமனை முன்பு தற்கொலைகுண்டுதாரியுடன் கார் ஒன்று வெடித்துச் சிதறும் காட்சி அடங்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
லிவர்பூலிலுள்ள மகளிர் மருத்துவமனை மருத்துவமனை வெளியே டாக்சி ஒன்று வெடித்துச் சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்கொலைகுண்டுதாரியுடன் அந்த டாக்சி வெடித்துச் சிதறும் அதிரவைக்கும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் போரில் உயிரிழந்த இராணுவ வீரர்களை நினைவுகூரும் Remembrance Day என்னும் நிகழ்வு நேற்று அநுசரிக்கப்பட்டது. அந்நாளில் சரியாக பகல் 11 மணிக்கு பிரித்தானியாவே அமைதி காக்கும். ஆனால், 10.59க்கு திடீரென லிவர்பூலிலுள்ள மகளிர் மருத்துவமனை ஒன்றின் அருகே டாக்சி ஒன்று வெடித்துச் சிதறியது.
டாக்சி வெடித்துச் சிதறியதில் டாக்சியிலிருந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும், டாக்சியின் சாரதிக்கு உடலில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், அந்த டாக்சி வெடிப்பு சம்பவம் தொடர்பாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த டாக்சியை செலுத்தியவர் David Perry என்பவர். டாக்சியில் ஏறிய ஒருவர், லிவர்பூல் ஆங்கிலிக்கன் தேவாலயத்துக்குச் செல்லுமாறு கூறியிருக்கிறார். டாக்சி சென்று கொண்டிருக்கும்போதே, நேற்று Remembrance Day என்பதால், ஆங்காங்கு சாலைகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்திருக்கின்றன. அதைக் கண்டதும் அந்த நபர் டாக்சியை லிவர்பூல் மகளிர் மருத்துவமனைக்கு விடுமாறு கூறியிருக்கிறார்.
மருத்துவமனையின் அருகே டாக்சியை நிறுத்திய David, தனது டாக்சியில் பயணித்த நபரின் உடையில் சிறிய மின் விளக்கு எரிவதை கவனித்திருக்கிறார். உடனே, அது ஒரு வெடிகுண்டாக இருக்கலாம் என கணித்த David, அந்த நபர் ஒரு தற்கொலை குண்டுதாரியாக இருக்கலாம் என கணித்து, காரின் கதவுகளை பூட்டி விட்டு, சட்டென கார் கதவைத் திறந்து வெளியே குதிப்பதற்குள் குண்டு வெடித்து கார் கண்ணாடிகள் சிதறிவிட்டன.
கார் வெடிக்கவும், அதைத் தொடர்ந்து David காரிலிருந்து வெளியேறுவதை வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம்.
அவர் வெளியே ஓடி வர, மற்றொருவர் ஓடோடிச் சென்று அவரை பாதுகாப்பாக தூரமாக அழைத்துச் செல்லும் காட்சியும், அதைத் தொடர்ந்து அந்த கார் கொழுந்து விட்டு எரியும் காட்சியும் வெளியாகியுள்ளன.
இந்த பயங்கர சம்பவத்தில் Davidஇன் காது உட்பட பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது.
என்றாலும், சிகிச்சைக்குப் பிறகு David வீடு திரும்பிவிட்டதாக தெரியவந்துள்ளது.
David அந்த நபரை காருக்குள் வைத்துப் பூட்டாமலிருந்திருந்தால், அந்த நபரால் மருத்துவமனையில் இருக்கும் பலரது உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என்பதால், அவரது தைரியமான செயலுக்கு பாராட்டுகள் குவிகின்றன.