பறவைகளை கொஞ்சம் கவனித்துப்பாருங்கள்: சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு விளையாடச் செல்வோருக்கு ஒரு எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு செல்வோர், பறவைகளையும் விலங்குகளையும் கொஞ்சம் கவனித்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
சுவிட்சர்லாந்தில், கொரோனா பிரச்சினை காரணமாக வழக்கமாக பனிச்சறுக்கு விளையாடும் காலகட்டத்தை தவறவிட்ட பலர், இப்போது பனிச்சறுக்கு விளையாட வருகிறார்கள்.
ஆனால், அதில் ஒரு பிரச்சினை உள்ளது. கொட்டும் பனிக்காலத்தில் சரியான உணவின்றி உடலிலுள்ள கொழுப்பெல்லாம் கரைந்துபோன நிலையில், இப்போதுதான் பறவைகளும் விலங்குகளும் மீண்டும் இரைதேட வெளியே வருகின்றன.
அப்படி அவை உணவு தேட வரும்போது, பனிச்சறுக்கு விளையாடச் செல்வோர் அவற்றிற்கு தொந்தரவாக இருப்பது, அவற்றின் வாழ்வாதாரத்தையே பாதிக்கும் என்கிறார்கள் சுவிஸ் வனத்துறையினர்.
சேவல்கள், -10 டிகிரி குளிரில், ஒரு நாளுக்கு மூன்று முறை பயந்து அங்கும் இங்கும் ஓடுமானால், ஏற்கனவே அவற்றின் உடலில் கொழுப்பு குறைந்துபோனதால் அவற்றின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
அத்துடன், அவற்றின் இனப்பெருக்கம் செய்யும் திறனும் பாதிக்கும் என்கிறார் வலாயிஸ் வனத்துறை அதிகாரியான Serge Mariéthoz.
எனவே, அமைதி மண்டலங்கள் என குறிப்பிடப்பட்டுள்ள இடங்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ள வனத்துறையினர், மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.