ஜெய்பீம் சர்ச்சையால் சூர்யா- ஜோதிகாவுக்கு இப்படி ஒரு சிக்கலா? வருத்தத்தில் ரசிகர்கள்
ஜெய்பீம் திரைப்படம் சர்ச்சையால் சூர்யா-ஜோதிகா உள்ளிட்ட 5 பேர் மேல் வழக்கு தொடர்ந்துள்ளது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய்பீம் திரைப்படமானது 28 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. இப்படம் வெளியானதில் இருந்து இப்போது வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
இருப்பினும் இப்படத்தில் சில காட்சிகளில் வன்னியர்களை மையப்படுத்தி கூறியுள்ளதால் சர்ச்சைகள் எழுந்துள்ளது. இதுதொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நடிகர் சூர்யாவிடம் பல கேள்விகளை முன் வைத்தார். அவர் கேட்ட கேள்விகளுக்கும் சூர்யா துணிச்சலாக பதிலளித்துள்ளார்.
ஆனாலும் சூர்யாவுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது. இதனால் சூர்யாவுக்கு துப்பாக்கி ஏந்திய பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது வன்னியர் சங்க தலைவர் பு.தா அருள்மொழி என்பவர் ஒரு ஜெய் பீம் திரைப்படத்திற்கு எதிராக வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
அதில் நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகா, தயாரிப்பு நிறுவனம் 2டி என்டர்டெயின்மெண்ட், இயக்குனர் தா.செ.ஞானவேல் மற்றும் திரைப்படத்தை வெளியிட்ட அமேசான் நிறுவனம் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இந்திய தண்டனைச் சட்டம் 1860ன் பிரிவுகள் 153, 153 A (1) , 499, 500, 503, மற்றும் 504 ஆகியவற்றின் கீழ் குற்றங்களுக்கான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 200 உடன் 199, 960 பிரிவின் கீழ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.