இங்கிலாந்தில் ட்ரக்குக்குள் மூச்சுத்திணறி உயிரிழந்த 39 புலம்பெயர்ந்தோர் வழக்கு: 18 பேருக்கு பிரான்ஸ் தண்டனை
பிரித்தானியாவின் எசெக்சில், ட்ரக் ஒன்றிற்குள் 39 புலம்பெயர்வோர் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
அந்த கோர சம்பவத்துடன் தொடர்புடைய 18 பேருக்கு பிரான்ஸ் நீதிமன்றம் ஒன்று சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
மூச்சுத்திணறி உயிரிழந்த 39 புலம்பெயர்ந்தோர்
2019ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 23ஆம் திகதி, இங்கிலாந்திலுள்ள எசெக்சில், லொறி ஒன்றின் ட்ரெய்லருக்குள் 39 புலம்பெயர்ந்தோர் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். அவர்களில் 28 பேர் ஆண்கள், 8 பேர் பெண்கள், 3 பேர் குழந்தைகள். அவர்கள் அனைவரும் வியட்நாம் நாட்டவர்கள்.
அந்த லொறி, பெல்ஜியத்திலிருந்து இங்கிலாந்துக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. காற்றோ, வெளிச்சமோ இல்லாத அந்த ட்ரெய்லருக்குள் சிக்கி, மூச்சுத்திணறி, கோரமான முறையில் உயிரிழந்திருந்தார்கள் அவர்கள் அனைவரும்.
ஆளுக்கு 13,000 பவுண்டுகள் செலுத்தி, பிரித்தானியாவில் புதிய வாழ்வு கிடைக்கும் என நம்பி வந்த அவர்கள் அனைவரும், சடலங்களாகத்தான் பிரித்தானியாவை வந்தடைந்தார்கள்.
18 பேருக்கு பிரான்ஸ் தண்டனை
இந்த வழக்கு, பிரித்தானியா, பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளிலும் நடைபெற்றது. பிரித்தானியாவில் கடத்தல் கும்பலின் முக்கிய நபர்களான இருவர் உட்பட சிலர் மற்றும் பெல்ஜியத்தில் ஒருவர் என, சிலருக்கு ஏற்கனவே சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
இந்நிலையில், பிரான்சில் நடைபெற்றுவந்த வழக்கில் தற்போது, 18 பேருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தண்டனை வழங்கப்பட்டுள்ளவர்கள், வியட்நாம், பிரான்ஸ், சீனா, அல்ஜீரியா மற்றும் மொராக்கோ நாட்டவர்கள் ஆவர். அவர்களில் வியட்நாம் நாட்டவர்கள் நான்கு பேருக்கு, 9 முதல் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், நான்கு பேருக்கு, 1 முதல்10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
உயிரிழக்கும் முன் சிலர் தங்கள் மொபைலில் தங்கள் குடும்பத்தினருக்காக சில செய்திகளை பதிவு செய்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றில், Pham Thi Tra My என்னும் 26 வயது இளம்பெண், அம்மா, அப்பா, நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன், நான் செத்துக்கொண்டிருக்கிறேன், என்னால் மூச்சுவிடமுடியவில்லை என்று கூறியிருந்தார். இன்னொருவர், எப்படியாவது வீட்டுக்குத் திரும்பி வந்து என் குடும்பத்துடன் இணைந்துவிடமாட்டோமா என்று தோன்றுகிறது என்று கூறியிருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |