கோயம்புத்தூர் இளைஞர் பிரித்தானியாவில் கொல்லப்பட்ட விவகாரம்: சமீபத்திய தகவல்
இந்தியாவிலிருந்து கனவுகளுடன் பிரித்தானியாவுக்குச் சென்ற ஒருவரது உயிர் அநியாயமாக பறிக்கப்பட்ட சம்பவம் ஒன்றைக் குறித்த சமீபத்திய விவரங்களை பிரித்தானிய பொலிசார் வெளியிட்டுள்ளார்கள்.
கனவுகளுடன் பிரித்தானியாவுக்குச் சென்ற இந்தியர்
ஹொட்டல் தொழிலில் சாதிக்கும் கனவுகளுடன் இந்தியாவின் கோயம்புத்தூரிலிருந்து இங்கிலாந்திலுள்ள Reading என்னும் நகருக்குச் சென்றவர் விக்னேஷ் பட்டாபிராமன் (38).
ஆனால், காதலர் தினத்தன்று, பிப்ரவரி மாதம் 14ஆம் திகதி, இரவு 11.50 மணிக்கு, பணி முடித்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த விக்னேஷ் மீது வாகனம் ஒன்று மோதியுள்ளது.
மோதியவர் வாகனத்துடன் விரைய, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட விக்னேஷ் சிகிச்சை பலனின்றி மறுநாள் பரிதாபமாக உயிரிழந்தார்.
எட்டு பேர் கைது
இந்த சம்பவம் ஒரு விபத்து என முதலில் கருதப்பட்ட நிலையில், தற்போது இந்த சம்பவம் தொடர்பாக ஷாஸேப் காலித் (Shazeb Khalid, 24) என்பவரும், அவருக்கு உதவியதாக 20 முதல் 48 வயது வரையுள்ள மேலும் ஏழு பேர் கைது செய்யப்பட்டார்கள்.
சைக்கிளில் சென்று கொண்டிருந்த விக்னேஷ் மீது மோதிய காரில் இருந்த ஒருவர் அவரைத் தாக்கியதும் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்திருந்தார்கள்.
கலைந்த கனவுகள்
இந்தியாவில் பிறந்த விக்னேஷ், ஒரு வருடத்திற்கு முன் பிரித்தானியாவுக்கு வந்துள்ளார். அவரும் இந்தியக் குடிமகளான அவரது மனைவியான ரம்யாவும் Reading என்ற இடத்தில் வாழ்ந்துவந்தார்கள்.
விக்னேஷ் கொல்லப்பட்ட அன்றுதான் அவருக்கு புதிதாக லண்டனில் ஒரு பணி கிடைத்துள்ளது.
லண்டனில் ஹொட்டல் ஒன்றை நிர்வகிக்கும் கனவுகளுடன் வீடு நோக்கிச் சென்றுகொண்டிருந்த விக்னேஷின் கனவுகளும், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரின் கனவுகளும் அன்றிரவே கலைந்துபோயின.
உண்மையில் நடந்தது என்ன?
விடயம் என்னவென்றால், விக்னேஷ், Vel உணவகம் என்னும் உணவகத்தில் பார்த்த வேலையை விட்டுவிட்டு, Hyatt Regency London என்னும் உணவகத்தில் வேலைக்கு சேர முடிவு செய்துள்ளார்.
Vel உணவகத்தில் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் பணி செய்வதாக யாரோ அதிகாரிகளுக்கு தகவ்ல் கொடுத்துள்ளார்கள்.
ஆகவே, அது விக்னேஷாக இருக்கக்கூடும் என சந்தேகப்பட்ட Vel உணவகத்தின் மேலாளரான முகம்மது சாதிக் இஸ்மாயில் (Mohammed Sadiq Ishmail) என்பவர், விக்னேஷை மிரட்ட யாரையாவது ஏற்பாடு செய்யுமாறு தன் நண்பனான சொய்ஹீம் ஹுசைனை (Soiheem Hussain) கேட்டுக்கொண்டுள்ளார்.
விக்னேஷை மிரட்ட அந்த ஹுசைனால் ஏற்பாடு செய்யப்பட்டவர்தான் ஷாஸேப் காலித்.
குற்றவாளி என முடிவு
இந்நிலையில், விக்னேஷை கொலை செய்த பாகிஸ்தான் நாட்டவரான ஷாஸேப் காலித் குற்றவாளி என தற்போது Reading நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
அவர் 2,000 பவுண்டுகள் வாங்கிக்கொண்டு, விக்னேஷ் மீது காரை மோதியதுடன், அவரை சுத்தியலால் அடித்திருக்கிறார். மறுநாள் விக்னேஷ் உயிரிழந்துவிட்டார்.
குற்றச்செயலுக்கு உதவியதாக ஹுசைன் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில், அக்டோபர் மாதம் 10ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |