நள்ளிரவில் சுவிஸ் இளம் பெண்ணுக்கு நடந்த கொடுமை: மருத்துவமனையில் சேர்ப்பு
சுவிட்சர்லாந்தில் இளம் பெண் ஒருவர் மூவர் கும்பலிடம் சிக்கி, துன்புறுத்தலுக்கு இலக்கான சம்பவத்தில், பொலிசார் பொது மக்கள் உதவி கோரியுள்ளனர்.
பாஸல் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு இச்சம்பவம் நடந்துள்ளது. நள்ளிரவு சுமார் 1 மணியளவில் தனியாக சிக்கிய இளம் பெண்ணை மூவர் கும்பல் பின் தொடர்ந்ததுடன், துன்புறுத்தியுள்ளது.
இதனிடையே வழி போக்கர்கள் இருவர் அந்த கும்பலிடம் விசாரிக்க, அந்த வேளையில் குறித்த பெண் அங்கிருந்து தப்பி புதர்களுக்கு இடையே மறைந்து பாதுகாப்பு தேடியுள்ளார்.
பின்னர் நண்பர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உதவி கோரியுள்ளார். நண்பர்கள் உடனையே அவசர மருத்துவ உதவிக்குழுவினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்த மருத்துவ உதவிக்குழுவினர், குறித்த பெண்ணின் அப்போதைய நிலை கண்டு உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் சேர்ப்பித்துள்ளனர்.
தற்போது இந்த விவகாரம் தொடர்பில் 23 முதல் 25 வயதுக்கு உட்பட்ட மூவர் கும்பலை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த தகவலின் அடிப்படையில், அந்த மூவரும் பிரெஞ்சு உச்சரிப்புடன் ஆங்கிலம் பேசிய வட ஆபிரிக்கர்கள் என தெரிய வந்துள்ளது.
மேலும், சம்பவத்தின் போது அந்த கும்பலை எதிர்கொண்ட வழி போக்கர்கள் இருவரும் பொலிசாரை அணுகி சாட்சியம் அளிக்க கேட்டுக்கொண்டுள்ளனர்.