உலகம் சுற்ற புறப்பட்ட இந்திய இளைஞரின் மோட்டார் சைக்கிள் திருடப்பட்ட விவகாரம்: பிரித்தானியர்கள் கொடுத்த இன்ப அதிர்ச்சி
உலகம் சுற்ற மோட்டார் சைக்கிளில் புறப்பட்ட இந்திய இளைஞர் ஒருவருக்கு பிரித்தானியாவில் எதிர்பாராத அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.
இந்திய இளைஞருக்கு பிரித்தானியாவில் கிடைத்த அதிர்ச்சி
இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த யோகேஷ் (Yogesh Alekari, 33), மே மாதம் தனது மோட்டார் சைக்கிளில் உலகம் சுற்றப் புறப்பட்டார்.
17 நாடுகளைக் கடந்து இங்கிலாந்துக்கு வந்த யோகேஷுக்கு, அங்கு எதிர்பாராத அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.
ஆகத்து மாதம் 28ஆம் திகதி, இங்கிலாந்திலுள்ள நாட்டிங்காமில் தனது மோட்டார் சைக்கிளை பார்க் செய்துவிட்டு காலை உணவு உண்பதற்காக சென்றுள்ளார் யோகேஷ்.
திரும்பி வந்து பார்க்கும்போது, தனது மோட்டார் சைக்கிளையும், அவரது லாப்டாப், கமெரா, பாஸ்போர்ட், பணம், கிரெடிட் கார்டு ஆகியவை வைத்திருந்த பையையும் காணவில்லை. யாரோ சிலர் அவரது மோட்டார் சைக்கிள் மற்றும் அதிலிருந்த பொருட்களைத் திருடிச் சென்றுவிட்டார்கள்.
ஆக, அடுத்து ஆப்பிரிக்கா செல்லும் ஆசையிலிருந்த யோகேஷின் உலகம் சுற்றும் திட்டம் தடைபட்டுவிட அதிர்ச்சியடைந்தார் அவர்.
பிரித்தானியர்கள் கொடுத்த இன்ப அதிர்ச்சி
இந்நிலையில், நாட்டிங்காமிலுள்ள Off Road Centre என்னும் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் யோகேஷுக்கு திருட்டு போன அவரது மோட்டார் சைக்கிளுக்கு பதிலாக அதைவிட சிறந்த 2020 KTM 790 Adventure என்னும் மோட்டார் சைக்கிளை பரிசாகக் கொடுத்துள்ளார்கள்.
Off Road Centre நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான Ben Ledwidge கூறும்போது, இந்த விடயம் பரிசைக் குறித்தது மட்டுமல்ல, யோகேஷ் உலகம் சுற்றிவந்த நிலையில், இங்கு வந்தபோது அவரது மோட்டார் சைக்கிள் திருடுபோய்விட்டது.
அது நம் நாட்டிங்காமுக்கும் கெட்ட பெயர். ஆகவே, இங்கு வந்து இப்படி ஆகிவிட்டதே என்ற வருத்தத்தோடேயே அவர் செல்லக்கூடாது, நம்மைப் போல மோட்டார் சைக்கிள் சமுதாயத்தைச் சேர்ந்த யோகேஷுக்கு நாம் உதவவேண்டும், அவர் தன் பயணத்தைத் தொடரவேண்டும் என்பதாலேயே அவருக்கு ஒரு மோட்டார் சைக்கிளை பரிசளித்துள்ளோம் என்கிறார்.
அதைத் தொடர்ந்து இந்தியா வந்த யோகேஷ், திருட்டுப்போன தனது ஆவணங்களுக்கு பதிலாக புதிய ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு மீண்டும் தனது உலக சுற்றும் பயணத்தைத் தொடர இருக்கிறார். அவர் இன்னும் 32 நாடுகளுக்கு பயணம் செய்யவேண்டும்.
இந்நிலையில், பிரித்தானிய பொலிசார் யோகேஷின் மோட்டார் சைக்கிள் திருட்டு தொடர்பாக 18 வயது இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளார்கள். ஆனாலும், அவரது மோட்டார் சைக்கிள் கிடைக்கவில்லை!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |