சுவிஸ் புகலிடக்கோரிக்கையாளர்கள் மையத்தில் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது என கருதப்படும் நோய் ஒன்று பரவல்...
முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது என கருதப்படும் சில நோய்கள் மீண்டும் உலகில் ஆங்காங்கு தலைகாட்டத்துவங்கியுள்ள விடயம் கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது.
புதிது புதிதாக தோன்றும் நோய்கள் ஒருபக்கம் மனித இனத்தை வாட்டி வதைத்துக்கொண்டிருக்கும் நிலையில், தடுப்பூசிகள் மூலம் ஒழித்துக் கட்டப்பட்டுவிட்டதாக நம்பப்படும் சில நோய்கள் தலைகாட்டத் துவங்கியுள்ளன.
சமீபத்தில் பிரித்தானியாவில் போலியோ நோய்க்கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது சுவிட்சர்லாந்தில் டிப்தீரியா என்னும் தொண்டை அடைப்பான் நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகள் பல தொடர்ச்சியாக முத்தடுப்பு ஊசி என அழைக்கப்படும் DTP அல்லது DTaP (Diphtheria, Tetanus, Pertussis) தடுப்பூசி வழங்கிவருவதைத் தொடர்ந்து, பல நாடுகளில் இந்த டிப்தீரியா முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது என்றே கருதப்படுகிறது.
Image - Keystone/Peter Klaunzer
ஆனால், சுவிட்சர்லாந்தின் Bern நகரில் அமைக்கப்பட்டுள்ள புகலிடக்கோரிக்கையாளர் மையம் ஒன்றில் தங்கியிருக்கும் சுமார் எட்டு பேருக்கு இந்த டிப்தீரியா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக புலம்பெயர்தலுக்கான சுவிஸ் மாகாணச் செயலகம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட எட்டு பேரும் ஓரிடத்திலும், அவர்களுடன் தொடர்பிலிருந்த, குறிப்பாக சிறுவர்கள் முதலான 170 பேர் மற்றொரு இடத்திலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கு முன் 1983ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் டிப்தீரியா தொற்று பதிவான நிலையில், சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் சுவிட்சர்லாந்தில் அந்நோய்த் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.