எனக்கு கேன்சர்னு.. பல மணிநேரம் கதறி அழுதேன்! மீண்டு வந்த பிரபலம்
பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் தனக்கு கேன்சர் என தெரிந்ததும் பல மணிநேரம் கதறி அழுத்ததாகவும், பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தது குறித்தும் பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றுள்ள கே.ஜி.எப் சாப்டர்-2 படத்தில் அதீரா எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியவர் சஞ்சய் தத்.
பிரபல இந்தி நடிகரான இவர், கடந்த 2020ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் புற்றுநோய் 4ஆம் நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சில மாதங்கள் சிகிச்சை மேற்கொண்ட சஞ்சய் தத், புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தார். இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இதுகுறித்து மனம் திறந்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில், 'ஊரடங்கில் அது ஒரு சாதாரண நாளாக இருந்தது. நான் படிகளில் ஏறிக்கொண்டிருந்தபோது என்னால் மூச்சுவிட முடியவில்லை. அதன்பிறகு குளித்தேன், அப்போதும் மூச்சுவிட முடியவில்லை. என்ன நடக்கிறதென்று தெரியவில்லை.
எனது மருத்துவரை அழைத்தேன். எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது எனது நுரையீரலில் பாதிக்கும் மேல் நீர்கோர்த்திருந்தது தெரியவந்தது. நீரை வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. எல்லாரும் அது காசநோயாக இருக்கும் என நினைத்தனர்; ஆனால் அது கேன்சர் என தெரியவந்தது.
அதை என்னிடம் சொல்வது என்பது அவர்களுக்கு கடினமாக இருந்தது. நான் யாருடைய முகத்தையாவது உடைத்துவிடுவேன் என்கிற பயம் அவர்களுக்கு. எனது சகோதரி என்னிடம் வந்து இதுபற்றி கூறினார்.
ஓகே. இப்போது என்ன? என்னென்ன செய்யவேண்டும் என திட்டமிடுங்கள் என்று கூறினேன். ஆனால் எனது குழந்தைகள், மனைவி மற்றும் வாழ்க்கையை நினைத்து கிட்டத்தட்ட இரண்டு மூன்று மணிநேரம் கதறி அழுதேன்' என தெரிவித்தார்.
மேலும், முதலில் வெளிநாடு செல்ல விசா கிடைக்காததால் ஹிருத்திக் ரோஷனின் தந்தையின் அறிவுரையின் படி இந்தியாவிலேயே சிகிச்சை எடுத்ததாகவும், அதன் பிறகு கீமோதெரபிக்கு மட்டும் துபாய் சென்று வந்ததாகவும், தற்போது பூரண குணமடைந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.