586 ரன் குவித்த ஜிம்பாப்பே! மூவர் சதம் விளாசல்..மிரண்ட ஆப்கான் அணி
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஜிம்பாப்பே 586 ஓட்டங்கள் குவித்தது.
பென் கர்ரன் அதிரடி
புலவாயோவில் ஜிம்பாப்பே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற ஜிம்பாப்பே துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. கும்பி 9 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, கைடனோ 46 ஓட்டங்கள் எடுத்தார்.
அதன் பின்னர் கைகோர்த்த பென் கர்ரன் (Ben Curran), சியான் வில்லியம்ஸ் கூட்டணி ஓட்டங்களை குவித்தது.
அரைசதம் அடித்த கர்ரன் அதிரடியாக 74 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 68 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.
மூவர் சதம்
தியான் மையர்ஸ் 27 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, வில்லியம்ஸ், எர்வின் இருவரும் சதம் விளாசினர். இவர்களின் கூட்டணி 163 ஓட்டங்கள் சேர்த்தது. வில்லியம்ஸ் 174 பந்துகளில் 3 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 154 ஓட்டங்கள் விளாசினார்.
அணித்தலைவர் எர்வின் (Ervine) 104 ஓட்டங்கள் குவித்து வெளியேற, பிரையன் பென்னெட் (Brian Bennett) அதிரடியாக ஆட 500 ஓட்டங்களை ஜிம்பாப்பே கடந்தது.
ஏனைய வீரர்களும் தங்கள் பங்குக்கு ஓட்டங்கள் சேர்க்க ஜிம்பாப்பே அணி 586 ஓட்டங்கள் குவித்தது. இறுதிவரை களத்தில் நின்ற பென்னெட் 124 பந்துகளில் 4 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 110 ஓட்டங்கள் விளாசினார். கசன்ஃபர் 3 விக்கெட்டுகளும், நவீத், ஸஹிர் கான் மற்றும் ஜியா உர் ரஹ்மான் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் முதல் இன்னிங்சில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, இரண்டாம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 95 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ரஹ்மத் ஷா 49 ஓட்டங்களுடனும், ஹஸ்மதுல்லா ஷஹிதி 16 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |