பால் பவுடரில் நச்சு இருப்பதாக எழுந்த பிரச்சினை: தீர்வு காணப்பட்டுவிட்டதா?
பிரபல உணவுப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான நெஸ்ட்லே நிறுவனம், 30க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது நிறுவனத் தயாரிப்பான குழந்தைகளுக்கான பால் பவுடரை திரும்பப் பெறுவதாக அறிவித்தது நினைவிருக்கலாம்.

பால் பவுடரில் கலக்கப்படும் ARA என்னும் உட்பொருளில் செருலைட் என்னும் நச்சுப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்தே அந்த தயாரிப்புகள் திரும்பப் பெறப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்தது.
பால் பவுடரில் நச்சு?
செயற்கையாக தயாரிக்கப்படும் பால் பவுடர்கள், தாய்ப்பாலை ஒத்திருக்கவேண்டும் என்பதற்காக, arachidonic acid (ARA) oil என்னும் ஒரு அத்தியாவசிய கொழுப்பு அமிலம் (essential fatty acid) பால் பவுடரில் கலக்கப்படுகிறது.
பால் பவுடரில் கலக்கப்படும் இந்த ARA எண்ணெயில், செருலைட் (cereulide) என்னும் நச்சுப்பொருள் இருப்பது, வழக்கமான சோதனையின்போது, மார்ச் மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த செருலைட் என்பது, பேசில்லஸ் சிரியஸ் (Bacillus cereus) என்னும் பாக்டீரியாவால் உருவாக்கப்படும் ஒரு நச்சுப்பொருளாகும்.
முக்கியமான விடயம் என்னவென்றால், இந்த நச்சுப்பொருளை சூடாக்கினாலும் அது அழியாது (heat-stable toxin). அதாவது, கொதிக்கும் நீருடன் கலந்தாலும் இந்த நச்சு அழியாது. பால் பவுடர் தயாரிக்கும்போது, அதை பதப்படுத்தினாலும் (pasteurisation) அந்த நச்சு அழியாது என்பது ஒரு முக்கியப் பிரச்சினை.
இந்த செருலைட் கலந்த பாலை அருந்தினால், குழந்தைகளுக்கு தொடர்ச்சியான வாந்தி, வயிற்றுப்போக்கு, கடும் சோர்வு முதலான பல பிரச்சினைகள் ஏற்படும்.
தீர்வு காணப்பட்டுவிட்டதா?
விடயம் என்னவென்றால், சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, பிரச்சினை முழுமையாக தீரவில்லை என்பது தெரியாமலே அந்த பால் பவுடரை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக வாங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள்!
இந்நிலையில், சுவிஸ் ஊடகமான RTS, அந்த பால் பவுடர் தொடர்பில் சில கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதாவது, பால் பவுடரில் நச்சு என்னும் பிரச்சினை எழுந்தபோது, பால் பவுடரில் செருலைட் என்னும் அந்த பிரச்சினைக்குரிய பொருள் எந்த அளவுக்கு இருக்கலாம் என்பதை அரசு அறிவித்தது.
விடயம் என்னவென்றால், பால் பவுடரை சோதனைக்குட்படுத்தி அதில் எந்த அளவுக்கு செருலைட் உள்ளது என்பதைத்தான் அறிவியலாளர்கள் கண்டுபிடித்தார்கள்.
ஆனால், பிள்ளைகளுக்கு பால் பவுடரை நாம் அப்படியே கொடுப்பதில்லை, அதை தண்ணீரில் கலந்துதான் கொடுக்கிறோம். பால் பவுடரை தண்ணீரில் கலக்கும்போதுதான், நுண்ணிய எண்ணெய்த்துளிகளுக்குள் மறைந்திருக்கும் இந்த செருலைட் வெளியே வந்து தண்ணீருடன், அதாவது, பிள்ளைகளுக்கு கொடுக்கப்படும் பாலுடன் கலக்கும்.
ஆக, பால் பவுடரை தண்ணீரில் கலக்கும்போது செருலைட்டின் அளவு அதிகரிக்கும்.
ஆனால், தண்ணீரில் கலந்தபின் அந்த பாலில் எவ்வளவு செருலைட் உள்ளது என்பது குறித்து இன்னமும் ஆய்வுகள் முடிவடையவில்லை.
சுவிஸ் ஃபெடரல் உணவு பாதுகாப்பு மற்றும் கால்நடை அலுவலகமான FSVO, இந்த செருலைட் தொடர்பில் ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு பால் பவுடர் தயாரிப்பாளர்களை கோரியுள்ளது.
ஆனால், செருலைட் பிரச்சினை முழுமையாக தீரவில்லை என்பது தெரியாமலே அந்த பால் பவுடரை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக இன்னும் வாங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |