இலங்கை கேப்டனுக்கு அவுஸ்திரேலியாவில் கிடைத்த பாரிய கௌரவம்! பெருமைகொள்வதாக கூறிய வெளிநாட்டு தலைவர்
மகளிர் பிக் பாஷ் போட்டி ஒன்றில் இலங்கையின் சாமரி அதப்பத்து பெயரில் இருக்கை வரிசை அர்ப்பணிக்கப்படும் என சிட்னி தண்டர் அணியின் தலைவர் அறிவித்துள்ளார்.
சாமரி அதப்பத்து
அவுஸ்திரேலியாவில் மகளிர் பிக் பாஷ் டி20 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. சிட்னி தண்டர் அணியில் இலங்கை கேப்டன் சாமரி அதப்பத்து விளையாடி வருகிறார்.
அவரது அணி 11 போட்டிகளில் 7 வெற்றிகளைப் பெற்று, புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. சாமரி அதப்பத்து பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் மிரட்டி வருகிறார்.
இந்த நிலையில் சிட்னி தண்டர் அணியின் தலைவர் ஆண்ட்ரூ கில்கிறிஸ்ட், 26ஆம் திகதி நடக்கும் போட்டியில் சாமரி அதப்பத்து பெயரில் இருக்கை வரிசை அர்ப்பணிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இருக்கை வரிசை
இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'இந்த சீசனில் சாமரி அதப்பத்து சிட்னி தண்டர் அணிக்கு களத்திலும், வெளியிலும் பெரும் பங்கு வகித்துள்ளார். அவர் தனது கலாச்சாரத்தை தனது அணியினருடன் மிகவும் வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டார்.
மேலும், எங்கள் கிளப் எதைக் குறிக்கிறது என்பதை உண்மையில் ஏற்றுக் கொண்டார். 26ஆம் திகதி நடைபெறும் SCG சிக்ஸர்ஸ் போட்டியில் வேடிக்கையாக பங்கேற்க மேற்கு சிட்னியைச் சுற்றியுள்ள ரசிகர்களை ஊக்குவிக்க, சாமரியின் பெயரில் ஒரு Seating bay-வை அர்ப்பணிக்கிறோம் எனக் கூறுவதில் பெருமைப்படுகிறேன்' என தெரிவித்துள்ளார்.
இலங்கை ஆடவர் கிரிக்கெட்டில் குழப்பங்கள் நிலவும் சூழலில், மகளிர் கிரிக்கெட் தொடர்பில் வெளியான இந்த அறிவிப்பு இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆறுதலாக அமையும் என்று கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |