மகளிர் உலகக்கிண்ணம்: இந்திய அணியிடம் படுதோல்வி..இலங்கை கேப்டன் கூறிய காரணம்
மகளிர் உலகக்கிண்ணத்தின் முதல் போட்டியில் இந்திய அணியிடம் படுதோல்வியடைந்ததன் காரணம் குறித்து இலங்கை அணித்தலைவர் சமரி அதப்பத்து தெரிவித்துள்ளார்.
269 ஓட்டங்கள்
கவுகாத்தியில் நடந்த மகளிர் உலகக்கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் நேற்று மோதின.
மழை காரணமாக 47 ஓவர்களாக குறைக்கப்பட, முதலில் ஆடிய இந்தியா 8 விக்கெட்டுக்கு 269 ஓட்டங்கள் குவித்தது. அமன்ஜோத் கவுர் 57 ஓட்டங்களும், தீப்தி ஷர்மா 53 ஓட்டங்களும், ஹர்லீன் தியோல் 48 ஓட்டங்களும் எடுத்தனர். இனோக ரணவீரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் ஆடிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 45.4 ஓவரில் 211 ஓட்டங்களே எடுத்தது. சமரி அதப்பத்து 43 ஓட்டங்களும், நிலாக்ஷி டி சில்வா 35 ஓட்டங்களும் எடுத்தனர். தீப்தி ஷர்மா 3 விக்கெட்டுகளும், ஸ்னேக் ராணா மற்றும் ஸ்ரீ சாரணி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இன்னும் நாங்கள் அமைதியாக இருக்கிறோம்
இதன்மூலம் இந்திய அணி 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தோல்வி குறித்து பேசிய இலங்கை அணித்தலைவர் சமரி அதப்பத்து (Chamari Athapaththu),
"எங்கள் திட்டங்களை நாங்கள் செயல்படுத்தினோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக இரண்டு கேட்சுகளை தவறவிட்டோம். துடுப்பாட்ட குழுவாக நாங்கள் ஆரம்பத்திலும், இடைப்பட்ட ஓவர்களிலும் இரண்டு விக்கெட்டுகளை இழந்தோம்.
இனோகவும், உதேஷிகாவும் நன்றாக பந்துவீசினர். அவர்களுக்கு அனுபவம் இருக்கிறது. இன்னும் நாங்கள் அமைதியாக இருக்கிறோம், என் வீராங்கனைகள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. பவர்பிளேயில் நாங்கள் நன்றாக துடுப்பாட்டம் செய்தோம்.
நான் ஆட்டமிழந்த பிறகு, துடுப்பாட்ட வீராங்கனைகள் கொஞ்சம் சிரமப்பட்டனர். தொடர்ந்து விக்கெட்டுகளை இழக்கும்போது சேசிங் செய்வது எளிதல்ல" என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |