48 பந்துகளில் 80 ஓட்டங்கள்! ருத்ரதாண்டவம் ஆடிய இலங்கை கேப்டன் சமரி அதப்பத்து
தம்புலாவில் நடந்த கடைசி டி20 போட்டியில், இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தியது.
இலங்கை மகளிர் அணி மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி தம்புலாவில் நடந்தது. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 138 ஓட்டங்கள் எடுத்தது.
கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 39 ஓட்டங்களும், ஜெமிமா 33 ஓட்டங்களும் எடுத்தனர். இலங்கை தரப்பில் சுகந்திகா, அம காஞ்சனா, ஓஷாதி ரணசிங்கே மற்றும் இனோக தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க வீராங்கனை விஷ்மி 5 ஓட்டங்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ஹர்ஷிதா 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஆனால் கேப்டன் சமரி அதப்பத்து அதிரடியில் மிரட்டினார். இந்திய அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய அவர் அரைசதம் விளாசினார்.
PC: Twitter(@OfficialSLC)
மறுமுனையில் நிதானமாக ஆடிய நிலக்ஷி 28 பந்துகளில் 30 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ரன்அவுட் ஆனார். எனினும் தொடர்ந்து ருத்ரதாண்டவம் ஆடிய இலங்கை கேப்டன், கடைசி வரை ஆட்டமிழக்காமல் தமது அணியை வெற்றி பெற வைத்தார்.
இலங்கை அணி 17 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 141 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. சமரி அதப்பத்து 48 பந்துகளில் 80 ஓட்டங்கள் எடுத்தார். இதில் ஒரு சிக்ஸர், 14 பவுண்டரிகள் அடங்கும்.
ஏற்கனவே தொடரை இழந்திருந்த இலங்கை அணிக்கு இந்த வெற்றி ஆறுதலாக அமைந்தது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் சூலை 1ஆம் திகதி தொடங்குகிறது.