DC அணியின் பயிற்சியாளர் குழுவில் இணையும் சமிந்த வாஸ்
chaminda vaas to join in delhi capitals as fast bowling coach: டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் இலங்கை முன்னாள் வீரர் சமிந்த வாஸ் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
DC அணியில் சமிந்த வாஸ்
2027 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவினை மாற்றியமைக்கும் முயற்சியில் அணி நிர்வாகம் இறங்கியுள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சுப் பயிற்சியாளராக இலங்கை முன்னாள் வீரர் சமிந்த வாஸ் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

52 வயதான சமிந்த வாஸ், 1994 முதல் 2009 வரை இலங்கை கிரிக்கெட் அணிக்காக விளையாடியுள்ளார்.
சமிந்த வாஸ் இலங்கை அணிக்காக 111 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 355 விக்கெட்களும், 322 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 400 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளர், ஒருநாள் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை எடுத்த இளம் பந்துவீச்சாளர் உள்ளிட்ட சாதனைகளை வாஸ் படைத்துள்ளார்.
மேலும், 1996 உலகக் கிண்ணம் மற்றும் 2002 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இலங்கை அணியில் சமிந்த வாஸ் இடம்பெற்றிருந்தார்.
டெல்லியில் நடைபெறும் DC அணியின் ஆயத்தப் பயிற்சி முகாம் மற்றும் தேர்வுகளில் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதே போல், இந்தியாவின் முன்னாள் வீரர் அமித் மிஸ்ராவும் சுழற்பந்து பயிற்சியாளராக இணைய உள்ளார்.

தற்போது தலைமை பயிற்சியாளாராக உள்ள ஹேமங் பதானிக்கு மாற்றாக முன்னாள் இந்திய அணித்தலைவர் சௌரவ் கங்குலி பொறுப்பேற்க உள்ளார்.

இதே போல் முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் உதவிப் பயிற்சியாளராக இணைய உள்ளார்.