தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்யும்- வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறியதாவது..,
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல், வரும் 6ஆம் திகதி முதல் வரும் 10ஆம் திகதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
லட்சத்தீவு பகுதிகள், அதனை ஒட்டிய தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடலின் தெற்கு பகுதிகள், தென் கிழக்கு அரபிக்கடலின் வடக்கு பகுதிகள், அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகள், மத்திய கிழக்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
ஆகையால் இப்பகுதிகளுக்கு இன்றும், நாளையும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்திள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |