வங்கக்கடலில் உருவாகும் புயல் சின்னம்.., 10 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும்
நேற்று பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவியது.
அது இன்று காலை 5.30 மணி அளவில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்று, காலை 8.30 மணி அளவில் அதே பகுதியில் நிலவுகிறது.
இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.
இது மேலும் அதற்கடுத்த இரு தினங்களில் வடமேற்கு திசையில் தமிழகம்- இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.
இன்று கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்.
மேலும், கடலூர், விழுப்புரம், அரியலூர், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள், புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |