முதலமைச்சராக தான் நுழைவேன்.., 31 மாதங்களுக்கு பிறகு சட்டமன்றத்திற்கு வந்த சந்திரபாபு நாயுடு
ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி மகத்தான வெற்றியை பெற்றதையடுத்து சந்திரபாபு நாயுடு சட்டமன்றத்தில் காலடி வைத்தார்.
சபதம் போட்ட சந்திரபாபு நாயுடு
ஆந்திர சட்டமன்றத்தில் கடந்த 2021 -ம் ஆண்டு நவம்பர் 19 -ம் திகதி அன்று, அப்போது ஆட்சி செய்த யுவஜன ஸ்ரமிகா ரைத்து காங்கிரஸ் (YSRCP) உறுப்பினர்கள் தெலுங்கு தேச கட்சி தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடுவின் மனைவியைப் பற்றி கூறியதாக சொல்லப்படும் தவறான கருத்துக்களுக்காக சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார்.
அதாவது பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது குறித்து விவாதிக்கும் போது சட்டமன்றத்தில் இருந்து சந்திரபாபு நாயுடு வெளியேறினார்.
அப்போது, இனிமேல் நான் சட்டசபையில் கலந்து கொள்ள மாட்டேன். நான் முதலமைச்சரான பிறகுதான் சபைக்குத் திரும்புவேன் என்று சபதம் விட்டார்.
மீண்டும் சட்டமன்றம்
இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மகத்தான வெற்றியை பெற்றது.
175 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களையும், கூட்டணிக் கட்சிகளான ஜன சேனா 21 இடங்களையும், பாஜக 8 இடங்களையும் வென்றன.
இதையடுத்து, நான்காவது முறையாக ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். இந்நிலையில், தனது சபதத்தை நிறைவேற்றும் வகையில் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இன்று சட்டசபையில் நுழைந்தார்.
அப்போது, சட்டமன்றத்தில் இருந்தவர்கள் அனைவரும் எழுந்து நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |