ஜனவரி 1ஆம் திகதி முதல் பிரான்ஸ் மருத்துவமனைகளில் அமுலுக்கு வரும் ஒரு நல்ல மாற்றம்
ஜனவரி 1ஆம் திகதி முதல், அனைத்து பிரான்ஸ் மருத்துவமனைகளிலும், விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கான கட்டணம் சீராக்கப்பட உள்ளது.
அதன்படி, அனைத்து மருத்துவமனைகளிலும் விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கான கட்டணம் 19.61 யூரோக்களாக நிர்ணயம் செய்யப்பட உள்ளது.
ஆனால், இந்த கட்டண விதி அவசர சிகிச்சைக்காக வருபவர்களுக்கு மட்டுமே, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோருக்கு கிடையாது (அதாவது வெளிநோயாளிகளாக வருபவர்களுக்கு மட்டுமே, உள் நோயாளிகளாக மருத்துவமனையில் அட்மிட் செய்யப்படுவோருக்கு கிடையாது)!
மருத்துவமனைக் கட்டணங்களை எளிதாக்கும் சமூக பாதுகாப்பு நிதிச் சட்டம் ஒன்றின் ஒரு பகுதியாக, இந்த மாற்றம் அமுல்படுத்தப்படுகிறது.
தற்போது விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கான கட்டணம் 25.28 யூரோக்களாக உள்ளது. இது அவசர சிகிச்சைக்கான கட்டணம் மட்டுமே, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான கட்டணம் அல்ல. மேலும், அவசர சிகிச்சைக்காக வருவோருக்கு சிறப்பு சேவைகள் ஏதாவது தேவைப்பட்டால், அதற்கு தனியாக கட்டணம் செலுத்தவேண்டும் என்ற விதிமுறையும் தற்போது நடைமுறையில் உள்ளது.
இன்னொரு விடயம், இந்த புதிய கட்டணமும் சிலருக்கு கிடையாது. அதாவது, வன்முறைக்கு ஆளான சிறார்கள், தீவிரவாத தாக்குதல்களுக்கு ஆளானவர்கள் மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு இந்த கட்டணம் கிடையாது.
மேலும், கர்ப்பிணிகள், நீண்ட கால நோய்வாய்ப்பட்டவர்கள் போன்றவர்களுக்கும் 8.49 யூரோக்கள் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்த மாற்றம் பெரிய அளவில் நோயாளிகளுக்கு நன்மை பயக்கக்கூடியதாக இருக்கப்போகிறது.