'மாற்றம்' இயற்கையின் நியதி
இன்று பலருடைய மன உளைச்சலுக்கும் மன குழப்பங்களுக்கும் முக்கிய காரணங்களில் ஒன்று மாற்றங்களை ஏற்றுக்கொள்ள மறுப்பது தான்.
உண்மையின் மனிதன் மாறுதல்களை ஏற்றுக்கொள்ள எப்போதும் விரும்புவதில்லை.
ஆனால் நாம் இயற்கையில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முதல் பாடம் மாறுதல் தான் என கூறினால் மிகையாகாது.
குடும்பத்தில் உள்ள மூத்தவர்கள் எப்போது பேச ஆரம்பித்தாலும் அந்த காலத்தில் நாங்கள் என்று ஆரம்பிப்பதை பார்த்திருப்பீர்கள், இதற்கு முக்கிய காரணம் மனிதன் மாற்றத்தை உடனடியாக ஏற்றுக்கொள்ளவோ, சகித்துக்கொள்ளவோ விரும்புவதில்லை.
"பழையன கழிதலும் புதியன புகுதலும் வாழ்க்கையின் மரபு" எப்பது பழைய நூல் தொல்காப்பியம் கூறும் போதனை இது எல்லா காலத்திற்கும் பொருந்தும்.
மாற்றம் ஒன்றே மாறாதது
பொதுவாக நாள்தோறும் இயற்யையில் மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணமே உள்ளது இருப்பினும் அதை நாம் உணர்வதில்லை.
குடும்பத்திலும் சரி தொழில் புரியும் இடத்திலும் சரி மாற்றங்களை ஏற்படுத்த விளையும் போது தான் பிரச்சினைகளும் முரண்பாடுகளும் தோற்றம் பெறுகின்றன.
நாம் எப்பொழுதும் மாற்றத்தை கண்டு பயப்படுகின்றவர்களாக இருக்கின்றோம். எதற்கு மாற்றம் செய்ய வேண்டும் இப்படியே இருந்து விடலாமே என்ற எண்ணம் கொண்டவர்கள் தான் அதிகம். ஆனால் இவ்வுலகில் மாற்றம் ஒன்றைத் தவிர அனைத்தும் மாறக்கூடியது.
இதனை விரும்பியோ விரும்பாமலோ ஏற்க வேண்டிய நிர்பந்தம் அனைத்து உயிர்களுக்கும் இயற்கையான விடயம்.
வரலாற்றின் அடிப்படையில் மாற்றங்களை ஏற்காதவை மனிதனாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்த உயிரினமாக இருந்தாலும் சரி அழிந்து போயுள்ளது என்பது நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய விஞ்ஞான பூர்வமான உண்மை .
சார்ஸ் டார்வினின் கூர்ப்பு கொள்கையும் அதை தான் பறைசாற்றுகிறது. அவரின் கூர்ப்பு கொள்கையின் அடிப்படையில் மிகவும் பலசாலியான உயிரினங்களோ அல்லது புத்திசாலியான உயிரினங்களோ பூமியில் நிலைப்பெற்று இருப்பதில்லை. மாறாக மாறுதல்களுக்கு தம்மை தயார்படுத்திக்கொண்ட உயிரினங்கள் மாத்திரமே நிலைத்திருக்கின்றது.
தயார்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம்
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மிகவும் பலம் வாய்ந்த டைனோசர் எனும் உயிரினம் இயற்கையின் மாற்றத்திற்கு ஈடுகொடுக்க முடியாத காரணத்தால் அந்த இனமே அழிந்து போனது.
இயற்கையின் மாற்றத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டதால் கரப்பான் பூச்சி இனம் இன்றும் பூமியில் நிலைத்திருக்கிறது.
மரணம் எப்படி தடுக்க முடியாததோ அது போல் மாற்றமும் தவிர்க்க முடியாதது. மாறுதல்களுக்கு முகங்கொடுக்க வேண்டியதும் அதற்கேற்ப எம்மை நாம் தயார்படுத்திக்கொள்ள வேண்டியதும் இன்றியமையாததாகும்.
மாறுதல்களை மனிதன் இலகுவாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் சிறு வயதில் இருந்தே அதற்கு பழக்கப்படுத்துதல் அவசியம்.
சில குடும்பங்களில் சிறுவர்களை திட்டுவதற்கு பயன்படுத்தும் வார்தைகளை சற்று கவனித்துப்பாருங்கள், மறைஎண்ணங்களை (Negative words )தோற்றுவிக்கும் வகையில் திட்டுவார்கள்.
இப்படிப்பட்ட சிறுவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் நான் எதற்கும் உதவாதவன், என்னால் இதை செய்ய முடியாது, எனக்கு ஒத்துவராது இது போன்ற சிந்தனையுடையவர்களாக காணப்படுவார்கள் இவர்களால் புதிதான கோணத்தில் சிந்தனை செய்ய முடியாது.
எனவே எப்போதும் எல்லா வற்றையும் பொசிட்டிவ்வாக பார்க்க வேண்டும். மற்றவர்களுடன் பேசும் போது மட்டுமல்ல உங்களுக்குள் சிந்திக்கும் போதும் கூட பொசட்டிவ் வார்த்தைகளை மாத்திரமே பயன்படுத்த வேண்டும்.
வேறு கோணத்தில் பார்க்கலாமே
தோமஸ் அல்வா எடிசன் குறிப்பிடுகையில் "ஆயிரம் முறை தோல்வியடைந்துவிட்டே ன் என கூற விரும்பவில்லை, தோல்வியடைவதற்கான ஆயிரம் காரணங்களை கண்டுப்பிடித்திருக்கிறேன் "என்றே கூற வேண்டும் என்கிறார்.
எடிசனின் 67 ஆவது வயதில் அவரின் ஆய்வுக்கூடம் தீப்பற்றி எறியும் போது கொஞ்சம் கூட மனம் தளராது அவரின் மனைவியை அழைத்து, எவ்வளவு பிரகாசமான தீசுவாலை என்று பார் இவ்வாறான தீசுவாலையை நீ எப்போது பார்க்கப்போகிறாய் என்றாராம்.
நாம் மாற்றம் என்றாலே பயப்படுகின்றோம். சில மாற்றங்கள் ஏற்படும் போது அந்த சூழ்நிலையை பயன்படுத்தி எப்படி முன்னேற முடியும் என மட்டுமே சிந்திக்க வேண்டும்.
இன்பம் எப்படி நிலையற்றதோ அது போல் நிச்சயம் துன்பமும் நிலையற்றது தான். வாழ்வில் ஒவ்வொரு நொடியும் மாற்றம் நிகழ்ந்துக்கொண்டே இருக்கும்.
இந்த உண்மையை புரிந்துக்கொண்டு மாறுதல்களுக்கு எம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும்.
மாற்றத்திற்கு ஈடுகொடுத்தால் மாத்திரமே பூமியில் நிலைத்திருக்க முடியும் என்பதனை மனதில் கொள்ளுங்கள்.
இந்த நியதி அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது, இதில் மனிதன் மாத்திரம் விதிவிலக்காக முடியாதென்பது திண்ணம்.