ஜேர்மனியில் 2023 செப்டம்பர் மாதத்தில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்கள்
செப்டம்பர் மாதம், ஜேர்மனியில் பல முக்கிய மாற்றங்களைக் கொண்டு வர உள்ளது. அவ்வகையில், தள்ளுபடி பயணச்சீட்டுகள் முதல், என்னென்ன முக்கிய மாற்றங்கள் நிகழவிருக்கின்றன என்பதைப் பார்க்கலாம்.
வாகனப் பதிவு டிஜிட்டல் மயம்
இதுவரை ஜேர்மனியில் தங்கள் காரை பதிவு செய்ய விரும்புவோர் அலுவலகத்துக்குச் சென்று அதைச் செய்தாகவேண்டும். ஆனால், செப்டம்பர் முதல், வாகனப் பதிவு முழுமையாக மின்னணு முறையில் செய்யப்பட உள்ளது.
தள்ளுபடி விலையில் பயணச்சீட்டு
ஜேர்மன் ரயில்வே, செப்டம்பர் மாதம் முழுவதும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 27 வயதுக்குக் கீழுள்ளவர்களுக்கும் BahnCard 100 என்னும் பயணச்சீட்டை தள்ளுபடி விலைக்குக் கொடுக்க உள்ளது.
மின்சார மற்றும் எரிவாயுக் கட்டணம் குறைப்பு
மின்சாரம் மற்றும் எரிவாயு வழங்கும் நிறுவனமான EON, தன் வாடிக்கையாளர்களுக்கான கட்டணங்களை செப்டம்பர் 1 முதல் குறைக்க உள்ளது. மின்சாரக் கட்டணம் சராசரியாக 18 சதவிகிதமும், எரிவாயுக் கட்டணம் 28 சதவிகிதமும் குறைக்கப்பட உள்ளது.
ELSTER நிதி போர்ட்டலில் மாற்றம்
ஜேர்மனியில் பலர் தங்கள் வரிக் கணக்கைத் தாக்கல் செய்யப் பயன்படுத்தும் ELSTER என்ற நிதி போர்ட்டலில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இதுவரை தளத்தில் அனைத்து செய்திகளும் சேமிக்கப்பட்டுவந்த நிலையில், செப்டம்பர் 18 ஆம் திகதி முதல், முக்கியமான ஆவணங்கள் மட்டுமே நிரந்தரமாக சேமிக்கப்படும், மற்ற அனைத்தும் ஒரு வருடத்திற்குப் பிறகு நீக்கப்படும். எனவே பயனர்கள் புதிய மாதத்தின் துவக்கத்தில் தங்கள் ஆவணங்கள் நீக்கப்படுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனவா என்பதை கவனித்து அவற்றை முன்கூட்டியே பதிவிறக்கம் செய்து சேமிக்கலாம்.
வரி தாக்கல்
2022ஆம் ஆண்டுக்கான வரிகள் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் செப்டம்பர் 30 ஆம் திகதி என்பதை நினைவில் கொள்ளவும்.
ஹாலோஜன் விளக்குகளுக்கு தடை
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆற்றல் சேமிப்பு திட்டங்களுக்கிணங்க, ஜேர்மனியில், செப்டம்பர் 1ஆம் திகதி முதல், குறைந்த வோல்டேஜ் ஹாலோஜன் விளக்குகளும், அதிக வோல்டேஜ் ஹாலோஜன் விளக்குகளும் விற்பனை செய்யப்படாது.
ஆனாலும், பழைய விளக்குகளுக்கு இந்த தடை பொருந்தாது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |